Home » » முஸ்லிம்களின் 20 வருட பெருநாள் வரவேற்பை உடைத்த டிரம்ப்

முஸ்லிம்களின் 20 வருட பெருநாள் வரவேற்பை உடைத்த டிரம்ப்

Written By Ceylon Muslim on Tuesday, June 27, 2017 | 11:31:00 AM



முஸ்லிம்களின் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு கடந்த 20 ஆண்டுகளாகப் பாரம்பரியமாக வெள்ளை மாளிகையில் நடத்தப்பட்டு வந்த இரவு விருந்துபசார நிகழ்வை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கிளிண்டனின் பதவிக் காலத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வெள்ளை மாளிகையில் நோன்புப் பெருநாள் விருந்து நடைபெற்று வந்திருக்கிறது.
ரமழான் வரவேற்பை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் நிராகரித்துள்ளார் என கூறப்படுகிறது.
தனது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்க மஸ்ஜித்களைக் கண்காணிக்க வேண்டும் என கூறியது உட்பட, முஸ்லிம்-எதிர்ப்பு பிரசார நடவடிக்கைகளுக்காகவும் டிரம்ப் விமர்சிக்கப்பட்டு வந்துள்ளார்.
“ஈத் திருநாளை கொண்டாடும் முஸ்லிம்களுக்கு, அமெரிக்க மக்கள் சார்பாக நானும், மெலனியாவும் இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்” எனவும்,  நம்பிக்கை மற்றும் தொண்டு நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்தும் புனித மாதமான ரமலானின் போது, அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்கள் உலகெங்கிலும் உள்ளவர்களோடு இணைந்துகொள்வார்கள்” என டிரம்ப் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த விடுமுறை நாட்களில், இரக்கம், கருணை மற்றும் நல்லெண்ணத்தின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்துகிறோம். முஸ்லிம்களின் மதிப்புகள் கௌரவிக்கும் விதமாக, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுடன் அமெரிக்கா தனது பொறுப்புக்களைப் புதுப்பித்துக்கொள்ளும். ரமழான் வாழ்த்துக்கள்” எனவும் அவ்வாழ்த்து அறிக்கையில் மேலும் டிரம்ப் கூறியுள்ளார்.
இதேவேளை, “ புனித ரமழான் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் வாழ்த்துக்கள்”  என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில், ஜனாதிபதி ஒருவர் நடத்திய முதல் இப்தார் இரவு விருந்து, 1805 இல் டியுனிசியா தூதருக்கு, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி தோமஸ் ஜெபர்சன் நடத்தியதுதான் என்று கூறப்படுகிறது.
1996 இல் ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்த போது, இந்த இப்தார் விருந்தை மீண்டும் புதுப்பித்துள்ளார்.
இது 1999  இலிருந்து அமெரிக்க முஸ்லிம் தலைவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் ஒரு வருடாந்த பாரம்பரிய நிகழ்வாக இது காணப்பட்டு வந்துள்ளது.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment