மாட்டிறைச்சி விவகாரம் ; இதுவரை 28 பேர் பலி



மாட்டிறைச்சி விவகாரத்தால் இந்தியா நாடு முழுவதும் ஆங்காங்கே பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. 

இவ்விவகாரம் தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் தாக்குதல்களும், வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பின், பசு பாதுகாவலர்கள் எனும் போர்வையில் சிலர் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ள அதிர்ச்சியடைய செய்யும் புள்ளி விவரமாக உள்ளது. 

கடந்த 2015 மார்ச் மாதம் மராட்டிய மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பின் அரியானாவிலும் மாட்டிறைக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, மாட்டிறைச்சி வைத்திருந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அவ்விரு மாநில அரசுகளும் சட்டம் இயற்றின. 

2015 மே 30-ம் தேதி ராஜஸ்தானின் நாகர் பகுதியில் இறைச்சிக்காக மாடுகளை கொன்றதாக அப்துல் குரேஷி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். 2015 செப்டெம்பர் 28-ல் உத்தரபிரதேச மாநிலம் தாத்ரியில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முகமது அக்லக் என்பர் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி காஷ்மீர் மாநிலம் உதாம்பூர் பகுதியில் பெட்ரொல் குண்டு வீசி ஒருவர் கொல்லப்பட்டார்.

2016/ம் ஆண்டு ஜனவரி 13 அன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள கிர்கியா ரயில் நிலையத்தில், மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கணவன் மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதே ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் லதேகர் பகுதியில் இறைச்சிக்காக மாடுகளை கொண்டு சென்றதாக மஜ்லூம், அன்சாரி, இம்தியாஸ் என்ற 3 இளைஞர்களை பசுப் பாதுகாவலர்கள் சிறைபிடித்தனர். கொடூரமாக தாக்கப்பட்ட அவர்கள் மூவரும் தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர். 2016-ல் ஏப்ரல் 2-ம் தேதி அரியானாவில் இறைச்சிகாக மாடுகளை கொண்டு சென்றதாக கூறி நடத்தப்பட்ட தாக்குதலில் முஸ்தீன் அப்பாஸ் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

2016 ஜூன் 2 அன்று, ராஜஸ்தானின் ரதாப்கரில், மாட்டிறைச்சி வைத்திருந்ததாக தலித் இளைஞர்கள் 5 பேர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டனர். 2016-ம் ஆண்டு ஜூன் 10-ல் அரியானாவின் குர்கானில் மாட்டிறைச்சி விவகாரத்தால் தாக்கப்பட்ட 2 பேரை, காட்டாயப்படுத்தி மாட்டு சாணத்தை உண்ண வைத்துனர் சில வன்முறையாளர்கள். 

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி ஹரியானா மாநிலம் மேவாவில் மாடுகளைக் கொன்றதாக கூறி, இஸ்லாமிய தம்பதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் ஏராளமானவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். 

2016-ல் ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி குஜராத் மாநிலம் உனாவில் மாட்டுத் தோலை உரித்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாக தாக்கப்பட்டனர். 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி கர்நாடகத்தின் உடுப்பியில் பாஜக தொண்டர் ஒருவரே பசுப் பாதுகாவலர்களால் கொலை செய்யப்பட்டார்.

2017  ஏப்ரல் மாதம் 20 அன்று அசாமில் இருவர் கொலை செய்யப்பட்டனர். 2017 ஜூன் மாதம் 23-ல் டெல்லி அருகே மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக 4 பேர் தாக்கப்பட்டனர். 2017 ஜூன் 28  நேற்று முன்தினம் ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதியில் உஸ்மான் அன்சாரி என்பவரின் வீட்டின் அருகே பசுவின் தலை இருந்ததால் அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டது. 

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக இதுவரை நாடு முழுவதும் 28 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 124 நபர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.