ஈராக்கில், மொசூல் நகர சந்தையில் ஏவுகணை வீச்சு: 50 அப்பாவி மக்கள் பலி
ஈராக்கில் கிழக்கு மொசூல் நகரத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து ராணுவம் மீட்டு விட்டது. மேற்கு மொசூல் நகரத்தையும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமிருந்து மீட்பதற்காக ஈராக் படைகள் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளன.

இந்தநிலையில், மொசூல் நகரத்தில் உள்ள மொசூல் அல் ஜாதிதா சந்தையில் நேற்றுமுன்தினம் மக்கள் ரம்ஜான் பண்டிகையையொட்டி தங்களுக்குத் தேவையான புத்தாடைகள், உணவுப்பொருட்கள் வாங்குவதில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கே ஒரு ஏவுகணை வந்து விழுந்தது. இதில் சிக்கி அப்பாவி மக்கள் 50 பேர் பலியாகி விட்டதாக அங்கிருந்து வரும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கு கடந்த மார்ச் மாதம் நடந்த வான் தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதும், இந்த தாக்குதலின்போது தங்களுடைய போர் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில் 105 பேர் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்கா ஒப்புக்கொண்டது நினைவு கூரத்தக்கது.

இதற்கிடையே அங்கு மொசூல் பழைய நகரத்தின் புறநகரமான பாப் அல் பீடில் 200 அப்பாவி மக்கள் சண்டைக்கு இடையே சிக்கித் தவித்துக்கொண்டிருப்பதாக ஈராக் உயர் போலீஸ் அதிகாரி ஜப்பார் ஹசன் தெரிவித்தார்.

அங்கு இன்னும் சில 100 பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி, அடுத்த சில நாட்களில் மொசூல் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு விடும் என்று நம்பிக்கை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.