வங்காளதேசத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 53-ஆக உயர்வுவங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வங்காள தேசத்தின் பல இடங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது. இதனால், டாக்கா மற்றும் சிட்டகாங் நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. கனமழை காரணமாக ரங்கமாதி மற்றும் பந்தர்பான் ஆகிய மாவட்டங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்து 25 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின

இந்நிலையில், மலைப்பிரதேசமான ரங்கமாதியில் அதிகபட்சமாக 36 பேரும், பந்தர்பான் மற்றும் சிட்டகாங்கில் 17 பேரும் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பலியானவர்களில் கனிசமான பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். மேலும், ரங்கமாதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரு ராணுவ வீரர்கள் சிக்கி உயிரிழந்துள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், ராணுவத்தை உதவிக்கு அழைத்துள்ளதாகவும், பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளார்.