மோரா" சூறாவளிக்கு ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் பரிதவிப்பு 7 பேர் பலி

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

வங்களாதேசத்தை தாக்கிய மோரா சூறாவளியினால் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இச்சூறாவளியில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் மியான்மரில் இருந்து அகதிகளாக வெளியேறி வங்கதேசம் எல்லைப்பகுதியில் 12,000 த்திற்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் வசிக்கும் முகாம்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால் அவர்கள் வெட்டவெளியில் வாழும் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

ரோஹிங்கியா முகாம் தலைவரான ஹாம்சுல் அலம் என்பவர் ராய்ட்டர் நியூஸ் ஏஜென்சியிடம் தெரிவித்துள்ளதன் படி, பலுகாலி (Balukhali) மற்றும் குடுபலோங் (Kutupalong) முகாம்களில் உள்ள பத்தாயிரம் கூரை வீடுகளும் கடுமையான சேதமடைந்துள்ளன.
வங்கதேச அரசின் குறிப்புகள் படி, அங்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் வாழ்ந்து வருகின்றனர். முஸ்லீம்களான ரோஹிங்கியாக்கள் மியான்மரில் புத்த பெரும்பான்மையினரால் தொடர்ந்து பாதுகாப்பின்மையை எதிர்கொண்டு வருவதில் அந்நாட்டைவிட்டு வெளியேறி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.