லண்டன் பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல்.. ; 7 பேர் பலி - பலர் காயம்!


மத்திய லண்டன் பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டதாக லண்டன் ஸ்கொட்லண்ட் யாட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லண்டன் பாலத்திற்கு அருகாமையில் பாதசாரிகள் மீது வெள்ளை நிற வானில் வந்தவர்கள் மோதி இந்த உயிரிழப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர்.
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தின் போது மேலும் 30 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
பாதசாரிகள் மீது மோதியதன் பின்னர், வாகனத்தில் இருந்து வெளியேறிய துப்பாக்கிதாரிகள் கூரிய ஆயுதம் கொண்டு பாதசாரிகளை தாக்கியுள்ளனர்.
சந்தேக நபர்கள் போலியான தற்கொலை அங்கிகளை அணிந்திருந்ததாக லண்டன் மெற்ரப்போலிட்டன் காவல்துறை உதவி ஆணையாளர் மாக் ரோலி  தெரிவித்துள்ளார்.
இதுவரை இடம்பெற்ற விசாரணைகளின் மூலம் இந்த தாக்குதல்களை மூவரே மேற்கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ள காவல்துறையினர், எப்படியிருப்பினும் பல கோணங்களில் விசாரணைகள் தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பிருத்தானிய பிரதமர் தெரேசா மே கருத்து தெரிவிக்கையில் இது மிக மோசமானதும் மிலேச்சத்தனமானதுமான தாக்குதல் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அரச அதிகாரிகளுடனான அவசர கூட்டம் ஒன்றை அவர் நடத்தியுள்ளார்.
அப்பாவி லண்டன் மக்கள் மீது நடத்தப்பட்ட கொழைத்தனமான தாக்குதல் என லண்டன் நகர பிதா சடீக் கான் தெரிவித்துள்ளார்.
இந்த அனர்த்தத்தை அடுத்து லண்டன் பாலம் இன்று பகல் வரை மூடப்பட்டிருந்தாக லண்டன் போக்குவரத்து காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இது வரை எந்த குழுவினரும் உரிமை கோரவில்லை.
லண்டன் தாக்குதலுக்கு சுமார் இரண்டு வாரத்திற்கு முன்னர் மஞ்சஸ்டெர் இசை நிகழ்வொன்றில் இடம்பெற்ற தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
அதேபோல, கடந்த மார்ச் மாதம் லண்டனில் மகிழுர்ந்து ஒன்றின் மூலம் மேற்கொண்ட தாக்குதலில் 5 பொதுமக்கள் பலியாகினர்.