தவறுகளுக்கு வருந்துகிறோம்; அல்-றாசித் டிரவலஸ் அதிபர் அன்சார் உருக்கம்சமூக வலைத்தளங்களிலும் ஒரு சில இணைய ஊடகங்களிலும் அல்-றாசித் தொடர்பில் வெளியான செய்திகள் குறித்து மனம் வருந்துவதோடு மக்கள் நலனை அதிகம் கருத்திற்கொள்ளும் எமது நிறுவனம் மீதான இப்படியான ஒரு குற்றச்சாட்டுக்கு பதில் வழங்க வேண்டிய தேவையும் உள்ளதாக அல்றாசித் டிரவல்ஸ் நிறுவன அதிபர் அன்சார் குறிப்பிட்டார்.

சிலோன் முஸ்லிம் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இதனை தெரிவித்தார், மேலும் கருத்துரைத்த அவர்,

அல்-றாசித் சொகுசு பஸ் சேவையை நான் ஆரம்பித்தது மக்கள் சொகுசாக பயணிக்க வேண்டும், மக்கள் அசௌகரியம் இன்றி பயணிக்க வேண்டும், பயணத்தில் அலுப்பு இருக்க கூடாது, வாடிக்கையாளரின் நலனே எமக்கு முக்கியம். ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் எது ஊழியர்களின் பொடுபோக்கு தனத்தினாலும் பயணிகள் சிலரின் தாமதத்தினாலும், சேவையின் போது நிறுத்தப்படும் ஹோட்டல் உரிமையாளர்களின் தான்தோன்றி தனமான செயல்களாலும் எமக்கு இழுக்கு ஏற்படுகிறது. இதற்கு முதலில் மன்னிப்பு கேட்கிறோம்.

எதிர்காலத்தில் எமது சேவையில் இப்படியான நடவடிக்கைகள் ஏற்படாதவாறும், பயணிகள் நலனை அதிகம் கருத்திற்கொள்ளும் ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்ளவும் தீர்மானித்துள்ளோம், ஒரு வியாபாரத்தில் உள்ள நிருவாக சிக்கல்கள் தொடர்பில் உங்களுக்கு விவரிக்க வேண்டிய தேவையிராது, ஆனாலும் தவறுகள் காணப்படின் எமது இலக்கங்களுக்கு அறியத்தரவும் உடன் நடவடிக்கை எடுப்போம் என்றார்.