Header Ads

ad728
 • Breaking News

  ’நாசா’ ரிஃபாத் ஷாரூக்கின் தாய் பெருமிதம்  “அவனோட அப்பா இறந்தப்போ, எனக்கு உலகமே காலுக்குக் கீழ நழுவுனாப்புல இருந்துச்சு. இன்னைக்கு உலகத்துலேயே சந்தோஷமான அம்மா நான்தான்னு தோணுது" - முகமெல்லாம் பூத்துக்கிடக்கிறது மகிழ்ச்சி ஷகிலாபானுவுக்கு. 'நாசா' நடத்திய போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்ட 'கலாம் சாட்' என்ற செயற்கைக்கோளை உருவாக்கிய தமிழக மாணவர் ரிஃபாத் ஷாரூக்கின் தாய்.

  'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' என்ற அமைப்பு மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் குறித்த பயிற்சியை அளித்துவருகிறது. அந்த அமைப்பைச் சேர்ந்த ஏழு இளைஞர்கள் சேர்ந்து, 'நாசா' வருடந்தோறும் நடத்தும் 'க்யூப்ஸ் இன் ஸ்பேஸ்' போட்டிக்காக உருவாக்கிய உலகின் எடை குறைந்த செயற்கைக்கோளான 'கலாம் சாட்', ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்திருக்கிறது. இதன் உருவாக்க ஐடியா ரிஃபாத் ஷாரூக்குடையது.

  கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியைச் சேர்ந்த 18 வயது இளைஞரான ரிஃபாத்தின் தாய்க்கு, தனது மகனின் ஐடியா நாசாவின் கதவைத் தட்டி விண்ணை அடைந்திருக்கும் பெருமிதம் குரலில் வழிகிறது. ''எனக்கு இவன் ஒரே பையன். என் கணவர் முகமது ஃபரூக் ஆந்திராவில் சயின்டிஸ்டா இருந்தார். ஆனா பெரிய வசதி இல்லை. 'அப்பா மாதிரியே நானும் சயின்டிஸ்ட் ஆகணும்'னு என் பையன் சொல்லி, எதையாச்சும் கழட்டி மாட்டிட்டே இருப்பான். ஆறு வருஷத்துக்கு முன்னாடி என் கணவர் திடீர்னு இறந்துபோயிட்டார். என் பையனை நல்லா படிக்க வெச்சு வேலைக்கு அனுப்புறது எனக்கு வாழ்நாள் கனவாச்சு. ஆனா அவன் விஞ்ஞானி ஆகணும்னு அதுலேயே ஆர்வமா இருந்தான். அதுக்கு எவ்வளவு தூரம் போகணும், போராடணும்னு எனக்கு பயம். அதனால, 'அந்த ஆர்வத்தை எல்லாம் சைடா வெச்சுக்கிட்டு, முதல்ல படிப்பை முடிடா'னு சொல்லிக்கிட்டே இருந்தேன்.

  இந்த வருஷம்தான் பனிரெண்டாவது முடிச்சான். 750/1200 மார்க்தான் எடுத்திருந்தான். எனக்கு சோர்வாகிடுச்சு. இன்ஜினீயரிங் படிக்கச் சொன்னேன். பி.எஸ்சி., ஃபிஸிக்ஸ்ல சேர்ந்தான். 'என்ன இவன் இப்படிப் பண்ணுறானே'னு ஆயிருச்சு. இப்போ அவன் உருவாக்கின செயற்கைக்கோள் விண்ணுல பாய்ந்த நிமிஷம், 'நம்ம மகன் கனவைக் கலைக்கப் பார்த்தோமே'னு சந்தோஷக்கு நடுவுல குற்றஉணர்ச்சியும் என்னைக் குத்தித்தான் பார்த்துச்சு. 

  ராக்கெட் கிளம்புன நொடி, அந்த நெருப்புல என் வயிறெல்லாம் குளிர்ந்துபோச்சு. இனி அவன் மேல 100% நம்பிக்கை வெச்சு, அவன் லட்சியத்துக்குத் துணையா இருப்பேன்''  என்கிறார் கண்ணீர் துடைத்து.
  ரிஃபாத் ஷாரூக்கிடம் பேசினோம். ''எங்கம்மா முகத்துல இந்த சந்தோஷத்தைப் பார்க்கிறது, ஸ்பேஸுக்குப் போன மாதிரி இருக்கு'' என்று சிரித்தவர், '' 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பின் ஹெட் ஸ்ரீமதி கேஷன் மேம்க்கு நிறைய நன்றி சொல்லணும்'' என்று அவரைக் கைகாட்டுகிறார்.

  " 'நாசா'வின் போட்டியில் கலந்துகொள்ள ரிஃபாத்தையும் சேர்த்து ஏழு மாணவர்கள் களத்தில் இறங்கினப்போ, 'இதெல்லாம் நடக்கிற விஷயமா?', 'இந்தப் பொடி பசங்கள வெச்சிட்டு செயற்கைக்கோள் விட முடியுமா?'னு பலரும் கேலி பேசினாங்க. அந்தக் கேலிகளை உரமாக்கி, நம்பிக்கை பயிர் வளர்த்து இன்னைக்கு சாதிச்சிருக்கோம். இந்த செயற்கைக்கோள் உலகிலேயே மிகவும் குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள். 

  இது வளி்மண்டலத்தில் உள்ள கதிரியக்க பாதிப்புகளை கணக்கிடும். இந்த ஐடியா ரிஃபாத்துடையதுதான் என்றாலும், ஒவ்வொரு பார்ட்ஸையும் ஏழு பேரும் பிரிச்சு வடிவமைச்சாங்க. இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு, அசிஸ் வேர்ல்டு ரெக்கார்டு, ஆசிய அளவிலான ரெக்கார்டுனு இந்த செயற்கைக்கோள் எங்களுக்குப் பல விருதுகளை வாங்கிக்கொடுத்திருக்கு. கின்னஸ், லிம்கா சாதனைகளுக்கும் இதை அனுப்பி இருக்கோம்.

  ரிஃபாத் ப்ளஸ் டூவில் 750/1200 மார்க் எடுத்ததுக்கு வருந்தினப்போ, 'நல்லதுன்னு நினைச்சுக்கோ. தமிழ்நாட்டுப் பெற்றோர்களுக்கு எல்லாம் நீ ஒரு முன்னுதாரணமா இருக்கப்போற. பிள்ளைகளை மார்க் ரேஸில் ஓடவைக்கும் அவங்களுக்கு, மார்க் கம்மியா எடுத்த ஒரு மாணவன் விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்பின சாதனை பாடமா இருக்கும்; மதிப்பெண்களுக்கும் அறிவுக்கும்  சம்பந்தமில்லைனு அவங்க உணரட்டும்'னு சொல்வேன். அதை இப்போ உணர்த்திட்டான் ரிஃபாத்'' என்றார் உற்சாகமாக.

  அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

  No comments

  Post Top Ad

  ad728

  Post Bottom Ad

  ad728