Jun 17, 2017

அலறி மாளிகையில் புத்த பிரான் ஓய்வெடுக்கிறாரா?தர்கா நகர் பற்றி எரிந்து மூன்று ஆண்டுகள்
வருடம் 2014 இல் இருந்து இலங்கை முஸ்லிம்களை பகடைக் காய்களாக வைத்து அரசியல் செய்யத் தொடங்கி மூன்று வருடங்கள் பூர்த்தி.
இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தைக் கொண்டு வருவதற்காக இந்த முஸ்லிம் சமூகத்தின் உண்ரவலைகளை சகுனிகளின் ஆட்டத்திற்கான அற்பக் காய்களாகப் பயன்படுத்திய ஈனச் செயலுக்கு வயது மூன்று.
அன்று எரிந்ததற்காக வெட்கப்பட்ட அமைச்சர்கள் இன்று அதனை நினைவு கூரவும் தயாரில்லை. மக்களின் பின்னால் சென்ற பாமரர்களாய் மாறினாலும் ஆட்சியில் அங்கம் வகிக்கும் மதியூக மந்திரிகள்.
பலஸ்தீனுக்காக ஒப்பாரி வைக்கும் மேதாவிகளும் அலப்போவிற்காக ஆர்ப்பாட்டம் நடத்தும் தாஇகளும் தர்கா நகரில் நாம் பாஞ்சாலிகளாக கிள்ளுக்கீரை களாக அரசியல் சடுகுடுவில் சல்லடைகளாக மாறிய வரலாற்றுக்காக ஓர் இரங்கல் கூட்டத்தையேனும் நடத்தினோமா?
கட்டாருக்காக நொடிக்கு நொடி வக்காலத்து வாங்கும் பிறவிகளே! நாம் ஏமாற்றப்பட்ட தர்கா நகர் காவியத்தைப் பாடினோமா? NGOக்கள் instructions வழங்கினால் மட்டுமா தர்கா நகரை ஞாபகிக்க வேண்டும்?
அன்றைய ஆட்சியில் கோலோச்சிய பெரும்பாலான அதே முகங்கள்தான் இன்றும் அதே அமைச்சர்களாய் அதிகார முகவர்களாய்...
கிராமங்களில் மகிந்த ஆதரவு சிங்கள மக்கள் பெருவாரியாய் இருந்ததும் நகரங்களில் வணிகம்சார் முஸ்லிம்கள் சரிபாதியாக இரு பிரதான கட்சிகளுக்கும் சமமாக ஆதரவு வழங்கியதும் விகிதாசாரபிரதிநிதித்துவ தேர்தல் அரசியலுக்கு மிக அவசியமான தரவுகள்.
எனவே மாவட்ட ரீதியிலான தேர்தல் முடிவுகள் மகிந்தவுக்கு எதிராக வரவேண்டும் என்றால் ஒட்டு மாெத்த முஸ்லிம்களையும் மத ரீதியாக தூண்ட வேண்டும்.
ஏற்கனவே யுத்தம் நடாத்தி தமிழ் மக்களின் விரோதத்தை சம்பாதித்த மகிந்தவை தமிழ் மக்கள் ஆதரிக்கமாட்டார்கள் என்பதும் அறிந்த விடயம். ஈற்றிலே ஆட்சி மாறியது.
இன்று என்னதான் மாறி விட்டது?
அலறி மாளிகையில் புத்த பிரான்
ஓய்வெடுக்கிறாரா? பாராளுமன்றத்தில் அசோகச்சக்கரவர்த்தி பாடம் நடத்துகின்றாரா?
ஆனால் பள்ளிவாசலில் மேற்குலக மனித உரிமை ஆர்வலர்களிடம் ஆட்சியை மாற்றியவர்கள்தான் முஸ்லிம் சமூகத்திற்கு நிகழும் அட்டகாசங்களை
முறையிடுகிறார்கள்.
மற்றும் ஒரு அமைச்சருக்கு இதற்குப் பின்னணியில் இருப்பது யார் என்று தெரியுமாம் ஆனால் பெயரை வெளியிட விரும்பவில்லையாம்.
என்ன நடக்கிறது இந்த நாட்டில்? யாருக்குப் படம் காட்டுகிறார்கள்?
முஸ்லிம்களே உங்களை வைத்து பிழைப்பு நடாத்துகின்றார்கள் இவர்கள். விழிப்பாக இருங்கள். துறைசார் நிபுணர்களை நீங்கள் பெற்ற கல்விமான்களிடம் சென்று அரசியல் படியுங்கள். தேர்தலில் உங்கள் புள்ளடிகளை விட சிந்தனையில் நிகழும் யுகமாற்றமே அவசியமானது.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post