சைட்டம் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில்(க.கிஷாந்தன்)

சைட்டம் நிறுவனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் 22.06.2017 அன்று காலை 8 மணிமுதல் அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

சைட்டம் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதலைக் கண்டித்தும் இவர்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் 22.06.2017 அன்று சில வைத்தியர்கள் கடமையில் ஈடுப்பட்டிருந்தாலும், சில வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டிருந்தனர். இதனால் இங்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை தாதிமார்களாலும் வைத்திய கடமை மேற்கொள்ளப்பட்டது.

லிந்துலை வைத்தியசாலையிலும் இவ்வாறான ஒரு நிலைமையை எம்மால் காணக்கூடியதாக இருந்தது.

சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டதில் சுமார் 80 பேர் வரை பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.