கிழக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை அவசரக் கடிதம்(எம்.ஜே.எம்.சஜீத்)

புதிய சுற்று நிறுபத்தின் படி அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 300 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் அவ்வலயத்திலிருந்து 40ஆசிரியர்களை வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்திருப்பது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு எதிரான செயற்பாடாகும் எனவும் இச்செயற்பாடானது அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அக்கரைப்பற்று வலய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளை கருத்தில் கொண்டு வெளி மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களை உடனடியாக இரத்துச் செய்யுமாறு கோரி கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணிக்கு அவசரக் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் புதிய சுற்று நிறுபத்தின் படி 300 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் அக்கரைப்பற்று வலய பாடசாலைகளில் கடமை புரிகின்ற 29 ஆசிரியர்கள் வெளி மாவட்ட பாடசாலைகளுக்கு உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளதாகவும், இதில் பெண் ஆசிரியர்கள் 26பேரும், ஆண் ஆசிரியர்கள் 3பேரும் உள்ளடங்குகின்றனர்.  வருடாந்த இடமாற்ற திட்டத்தின் கீழ் 11 ஆசிரியர்களும் மொத்தமாக 40 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

அக்கரைப்பற்று வலய பாடசாலைகளில் ஏற்கனவே ஆசிரிய வெற்றிடங்கள் நிலவுவதால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலையின் சுமுகமான செயற்பாடுகள் சீர் குலைந்து பாடசாலையின் வழமையான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள்; ஆசிரியர்களின் வெற்றிடங்கள் காரணமாக பாடசாலை அதிபர்களின் நிர்வாகக் கட்டமைப்பும் சீர் குலைந்து காணப்படுகின்றது. இவ் ஆசிரியர்களின் இடமாற்றம் அக்கரைப்பற்று வலய மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு எதிரான சதித் திட்டமாகவே நோக்க வேண்டியுள்ளது. 

கல்முனை வலய பாடசாலைகளிலிருந்து சுமார் 40 ஆசிரியர்கள் 1 1/2  வருட, 2வருட சேவைக் காலங்கள் குறிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளவர்கள் இதுவரையும் அக்கரைப்பற்று வலய பாடசாலைகளில் தங்களின் கடமைகளை பொறுப்பேற்காமல் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனை வலயத்திலிருந்து இவ்வாறு அக்கரைப்பற்று வலய பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 1 1/2  வருட, 2வருட சேவைக் காலத்தினை நிறைவு  செய்துவிட்டு மீண்டும் கல்முனை வலயப் பாடசாலைகளுக்கு தங்களின் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.

இந்த நிலை ஏற்படும் போது 1 1/2 வருட காலத்தின் பின் அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக ஏற்படவுள்ளது. எனவே கிழக்கு மாகாண சபையினால் விரைவில் வழங்கப்படவுள்ள ஆசிரியர் நியமனங்களில் அக்கரைப்பற்று வலய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு புதிய ஆசிரியர் நியமனங்களை வழங்குவதன் ஊடாக நிரந்தரமான தீர்வுகளை பெறமுடியும்.

அண்மைக் காலமாக அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலைகளில்; நடைபெற்ற சில செயற்பாடுகளினால் அவ்வலய பாடசாலைகளின் கல்வி வளர்ச்சி மிகவும் பாதிக்கக் கூடிய நிலைமை உருவாகியுள்ளது என்பதை அக்கரைப்பற்று வலய கல்வியலாhளர் குழு தங்களின் அமைச்சில் தங்களை சந்தித்து விபரங்களை தெரிவித்தனர்.

கல்வியலாளர் குழுவினர்களின் விபரங்களை கேட்டறிந்த நீங்கள் அக்கரைப்பற்று வலய பாடசாலையின் கல்வி வளர்ச்சியை சீர்குலைக்கும் வகையில் அரசியல் காரணங்களுக்காக சிறந்த முறையில் ஆளுமையுடன் செயற்படும் அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட மாட்டார்கள் என தெரிவித்ததுடன் கல்வியலாளர் குழு முன்னிலையிலே அரசியல் காரணங்களுக்காக எந்தவொரு பாடசாலை அதிபரையும் இடமாற்ற வேண்டாமென கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தீர்கள். 

குறிப்பாக ஒரு மாத காலம் சென்ற பின் அரசியல் காரணங்களுக்காக அதிபர்களை இடமாற்ற வேண்டாமென்ற பணிப்புரை நீக்கப்பட்டு அக்கரைப்பற்று வலயத்;தில் ஆளுமையோடும் அர்ப்பணிப்போடும் பாடசாலைகளுக்கு தலைமை கொடுத்து சிறந்த முறையிலே இயங்கிக் கொண்டிருந்த பல அதிபர்கள் அரசியல் காரணங்களுக்காக இடமாற்றப்பட்டனர். இதனால் அக்கரைப்பற்று வலய பாடசாலைகளில் கல்வி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு தெரியப்படுத்துகின்றேன்.

அக்கரைப்பற்று வலய பாடசாiலைகளின் கல்விச் செயற்பாடுகளை பலவீனப்படுத்தும் பல நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்த நடவடிக்கைகளை யார் மேற்கொண்டாலும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் என்ற வகையில் தாங்களே பொறுப்புக் கூற வேண்டிய தார்மீகக் கடமை தங்களுக்கு உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அக்கரைப்பற்று வலய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளை கருத்தில் கொண்டு அக்கரைப்பற்று வலய பாடசாலைகளில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களை இரத்துச் செய்து அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்வதுடன், கிழக்கு மாகாணத்திற்கான தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கை ஒன்றினை கிழக்கு மாகாண அமைச்சரவையில் தாங்கள் சமர்ப்பித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கையின் ஊடாகவே ஆசிரியர் இடமாற்றங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தீர்கள்.

மேற்படி தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் நடவடிக்கைகளிலும், பாடசாலை நிருவாகங்களிலும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற சிந்தனையுடைய சில அதிகாரிகளினாலும், அரசியல்வாதிகளினாலும் பாடசாலை சமூகத்தை சீர்குழைக்கின்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய நிலைமையினை ஏற்படுத்த முடியும் என்பதனை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.

கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நாம் இக்காலகட்டத்திலே கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் தேசிய ஆசிரியர் இடமாற்றக்கொள்கையை அமுல்படுத்துவதற்கு அவசர நடவடிக்கைகளை எடுப்பதன் ஊடாக எதிர்வரும் தேர்தலில் அமையவுள்ள கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சரினால் சீரான ஆசிரியர் இடமாற்றங்களை மேற்கொள்ள முடியும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.