Jun 29, 2017

உமாஓயா திட்ட போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஜனாதிபதி(க.கிஷாந்தன்)

இந்த நாட்டில் 28.06.2017 அன்றைய தினம் நான்கு போராட்டங்கள் மக்களால் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டங்களில் பண்டாரவளையில் இடம்பெற்ற போராட்டமானது அங்கு மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நியாயமானது. எனவே இந்த போராட்டத்தில் மக்களின் பக்கமே நானும் ஒருவனாக இருக்கின்றேன் என்பதை தெரிவிக்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அட்டனில் தெரிவித்தார்.

அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழா 29.06.2017 அன்று அதிபர் ஆர்.ஸ்ரீதரன் தலைமையில் அட்டன் டீ.கே.டபிள்யூ மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறிய அவர் மேலும் தெரிவித்தாவது,

உமாஓயா பல்நோக்கு வேலைத்திட்டமானது கடந்த அரசாங்கத்தில் ஈரான் நாட்டின் பாரிய கடனை பெற்று இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான பொறியியலாளரின் அனுகுமுறை தொடர்பிலான அறிக்கையை கடந்த அரசாங்கம் சரிவர பார்த்து செயற்படாததால் இன்று அந்த திட்டத்தினால் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த திட்டத்திற்கு பெற்றுக்கொள்ளப்பட்ட கோடிக்கணக்கான பணத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளது.

எவர்எவருடைய சட்டை பைக்குள் இந்த பணம் சென்றுள்ளது என்பதை ஆராய வேண்டும். இதற்கென விசாரணை குழு ஆரம்பிக்கப்படும்.  நான் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் இப்பதவிக்கு வந்தவுடன் இத்திட்டத்தை நிறுத்துவதற்கு முடிவு செய்தேன். ஆனால் அக்காலப்பகுதியில் இத்திட்டத்திற்கான வேலை மூன்றில் இரண்டு பங்கை கடந்து விட்டது. ஆகையால் இதை எவ்வாறாவது பூர்த்தி செய்ய வேண்டும் என செயற்படுகின்றோம்.

இந்த உமாஓயா திட்டத்தை ஜேர்மன் நாட்டின் நிபுணர் ஒருவரை வரவழைத்து அதனை பார்வையிட அனுப்பியுள்ளேன் என தெரிவித்த ஜனாதிபதி உலகில் அகழாய்வு தொடர்பான சிறந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கும் நாடு நோர்வே ஆகும்.

அந்நாட்டு நிபுணர்களுக்கும் நான் அறிவித்துள்ளேன். அவர்கள் இங்கு வருகை தந்து இத்திட்டத்தை வெற்றிகரமாக்குவது எமது இலக்காகும்.

சைட்டம் கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இன்று சைட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 28.06.2017 அன்று கொழும்பில் இடம்பெற்ற சைட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் அவ் கல்லூரியில் கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் கோட்டை ரயில் நிலையத்தில் பந்தலிட்டு ஈ மொய்க்கும் நிலையில் இருந்தனர்.

29.06.2017 அன்று அதிகாலை 6 மணியளவில் அவர்களை நான் பார்வையிட சென்றேன். ஆனால் நான் பார்வையிட்டது அவர்களுக்கு தெரியாது. இவ்வாறாக பல்வேறுப்பட்ட விடயங்களுக்கு போராட்டம் செய்யும் நிலையில் மின்நார சபை ஊழியர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

கடந்த அரசாங்கத்தில் மின்சார சபையில் தொழில் புரிந்த பொறியியலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு சம்பளம் உயர்வு வழங்கப்பட்டது. இந்த சம்பள உயர்வை எமக்கும் வழங்குங்கள் என்று நியாயமான கோரிக்கையை முன்வைத்து அவர்கள் போராட்டத்தை மு்னனெடுத்தனர். இப்பிரச்சினை தீர்க வேண்டிய பிரச்சினை தான். ஆனாலும் இலங்கை மின்சார சபை நட்டத்தில் இயங்குகின்றது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நான் ஆட்சிக்கு வந்து இரண்டு அரை வருடத்தில் ஜனநயாகத்தை இந்த நாட்டில் உருவாக்கியுள்ளோம். அரசாங்கம் ஜனாதிபதி என்ற நிலையில் என்னிடம் கட்சிகள், இனங்கள் என்ற வேறுபாடுகள் இல்லை. அணைவரையும் பொதுவான கண்ணோட்டத்தில் பார்த்தே சேவை செய்கின்றேன்.

இந்த நாட்டை கட்டிகாத்து அபிவிருத்தி அடைய செய்ய அணைவரினது மத்தியிலும் ஒற்றுமை நிலவ வேண்டும் என்பது எனது அவா. 125 ஆண்டு விழாவை கொண்டாடும் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி உலகத்திற்கும் இந்நாட்டிற்கும் எத்தனையோ கல்விமான்களை உருவாக்கி வழங்கியுள்ளது.

இந்த வகையில் ஹைலண்ஸ் கல்லூரியின் ஆரம்ப காலமுதல் இன்று வரை சேவை செய்த மற்றும் செய்து வரும் ஆசிரியர் குழாம்க்கு நன்றிகளை தெரிவிப்பதோடு, அவர்களை மறந்துவிட கூடாது.

125 ஆண்டுகளாக இக்கல்லூரி முன்னேற்றம் அடைந்து வந்துள்ள நிலையில் எதிர்வரும் காலத்தில் 125 ஆண்டுகள் உலகம் தொழில்நுட்ப ரீதியில் பல சவால்களை சந்திக்க நேர்ந்துள்ளது. எதிர்வரும் 125 ஆண்டுகளை எவ்வாறு கடக்கலாம் என்பதை இவ்விழாவின் மூலம் ஹைலண்ஸ் கல்லூரி எதிர்காலத்தை நகர்த்தி செல்ல வேண்டும்.

இந்த மாணவர்கள் நல்ல கல்விமான்களாக மாற்றம் பெற்று கல்வி பெறுபேறுகளை அடைந்தால் மட்டும் போதாது. வாழ்க்கையில் நல்ல பெறுபேறுகளை அடைய வேண்டும்.

கொழும்பில் இருந்து மலையகத்திற்கு வருபவர்கள் இங்குள்ள தேயிலை மலைகளின் அழகையும் எழிலையும் இரசிக்கும் அளவிற்கு நல்ல சூழல் காணப்படுகின்றது. இந்த சூழலில் தமது உடலை வறுத்தி உழைக்கும் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

கல்வி, சுகாதாரம் நோயற்ற வாழ்வுடன் இவர்கள் வாழ்வதற்கு நாம் பல்வேறு வேலைதிட்டங்களை முன்னெடுத்து செல்கின்றோம். யாழ்ப்பாணம், மட்டகளப்பு, அதற்கு அடுத்த படியாக நுவரெலியா மாவட்ட அரசாங்க சாராயங்களை விற்பனை செய்து அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்த முதல் இரண்டு மூன்றாம் இடங்களை பெற்றுள்ளது. ஆனால் மந்த போஷனத்தில் நுவரெலியா மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. எனவே எதிர்பாலத்தில் மந்தபோஷனத்தை ஒழித்து கல்வியில் முன்னேற்றமடைய நாம் நமது செயல்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றோம்.

இன்று மாணவர்கள் மத்தியில் மட்டுமன்றி பலரின் மத்தியிலும் கையடக்க தொலைபேசி ஒரு பாரிய பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றது. இனங்களுக்கு இடையில் ஒற்றுமைகளை ஏற்படுத்த முடியாத அளவிற்கு இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள், முகப்புத்தகம் என நல்ல விடயங்களுக்கு அப்பால் வேறு விடயங்களையும் இவர்கள் மத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது.

இந்த தொழில்நுட்ப ரீதியிலான செயல்பாடுகளினால் இலங்கையில் கடும் போக்காளர்கள் ஒற்றுமையை ஏற்படுத்த முடியாத அளவிற்கு செயல்படுகின்றனர். எனவே நல்லவைகளை இந்த தொழில்நுட்பத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளும் எமது மக்கள் தீயவைகளுக்கு இடம்கொடுக்க கூடாது என தெரிவித்தார்.

கடைசியாக கொழும்பில் உள்ள பாடசாலைகளில் அங்குள்ள மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகளை போல மலையகத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கும் அவ் வசதிகள் கிடைக்க வேலைதிட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network