ஹபுகஸ்தலாவ டொண்சய்ட் தேயிலை தொழிற்சாலை தீப்பற்றி எரிகிறது!நாவலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான நாவலப்பிட்டி ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் அமைந்துள்ள டன்சைட் தனியார் தோட்ட தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினால் குறித்த தொழிற்சாலை முற்றாக ஏரிந்து நாசமாகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

09.06.2017 அன்று அதிகாலை 1 மணியளவிலே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெலம்பொட பிரதேசத்தைச் சேர்ந்த அல்ஹாஜ் ராஸிக் என்பவர்க்குச் சொந்தமான “டன்சைட்” எனும் தேயிலை தொழிற்சாலையே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

தீயை அணைக்க நாவலப்பிட்டி பொலிஸாரும், பொது மக்களும் முயற்சித்த போது தீயினால் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை என்பதுடன், சேத விபரங்களும் சரியாக கண்டறியபடவில்லை, மின் ஒழுக்கின் காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றிருக்கலாம் என தொழிற்சாலையுடன் சம்மந்தப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்தார்.

08.06.2017 அன்றைய தினம் விடுமுறை தினம் என்பதால் தொழிற்சாலை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.