பாரீஸ்: போலீஸ் மீது மர்மநபர் சுத்தியலால் தாக்குதல்பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள சர்ச் அருகே போலீஸ் மீது மர்மநபர் ஒருவன் சுத்தியலால் தாக்குதல் நடத்தியுள்ளான். இதனையடுத்து, போலீசார் அவனை சுட்டுக்கொன்றனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நோட்ரே டேம் என்ற இடத்தில் தேவாலயம் உள்ளது. நேற்று, தேவாலயத்தின் வெளியே பாதுகாப்பு பணியிலிருந்த போலீசாரை மர்மநபர் ஒருவன் சுத்தியலால் தாக்கியுள்ளார். இதனையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து வந்த மற்ற போலீசார் அந்நபரை சுட்டுக் கொன்றனர்.

நோட்ரே டேம் பகுதியில் அதிகமான சுற்றுலாப்பயணிகள் தங்கியுள்ளதால் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் மீது தாக்குதல் நடத்திய நபர் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஐரோப்பிய நாடுகளில் இது போன்ற தாக்குதல்கள் சமீபத்தில் அதிகளவில் நடைபெற தொடங்கியுள்ளன.

கடந்த வாரத்தில் லண்டன் நகரில் இதே போல் தீவிரவாதிகள் கத்தியால் பொதுமக்களை தாக்கியும், வாகனங்களை பாதசாரிகள் மீது மோதவிட்டு தாக்குதல் நடத்தியதில் 7 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.