லண்டன் வேன் தாக்குதலுக்கு பிரிட்டன் முஸ்லிம் கவுன்ஸில் கண்டனம்


லண்டன் பின்ஸ்பெரி நகரில் பள்ளிவாயலுக்கு அருகில் இடம்பெற்ற வேன் தாக்குதல் சம்பவத்தை பிரிட்டன் முஸ்லிம் கவுன்ஸில் வன்மையாகக் கண்டித்துள்ளது.
அத்துடன், ஏனைய மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு தூண்டுதல் நடவடிக்கையே இதுவெனவும் முஸ்லிம் கவுன்ஸில் குற்றம்சாட்டியுள்ளது.
பின்ஸ்பெரி சம்பவம் தொடர்பில் பிரிட்டன் முஸ்லிம் கவுன்ஸில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதன் செயலாளர் நாயகம் ஹாரூன் கான் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
இது ஒரு பயங்கரவாதத் தாக்குதலாக பரவலாக சித்தரிக்கப்படுகின்றது. இது வேண்டுமென்றே திட்டமிட்டு வழிபாட்டில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதல் நடவடிக்கையாகவே பார்க்கின்றோம்.
இரவு வேளையில் சாதாரணமாக பிரித்தானிய மக்கள் தங்களது வாழ்க்கை விவகாரங்களில் ஈடுபட்டு வருவது வழக்கம். முஸ்லிம்கள் தமது ரமழான் கால இரவு வணக்கத்தில் குடும்பத்துடன் பள்ளிவாயலுக்கு சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் காட்சிகளை சகித்துக் கொள்ளாதவர்களே, இஸ்லாத்தைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில வாரங்கள் மாதங்களாக பல்வேறு சம்பவங்களினூக முஸ்லிம்களைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
ரமழானின் கடைசிப் பகுதியிலும், நோன்புப் பெருநாள் காலத்திலும் எல்லா முஸ்லிம்களும் தங்களது பிரதேச பள்ளிவாயலுக்கு சென்று வருகின்றனர். இதனால், நாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முஸ்லிம்களுக்கான பாதுகாப்பை பள்ளிவால்கள் உள்ள பகுதிகளில் உடனடியாக அதிகப்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம் எனவும் பிரிட்டன் முஸ்லிம் கவுன்ஸில் பொதுச் செயலாளர் நாயகம் ஹாரூன் கான் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.