பிரதமர் மோடியை புகழும் இஸ்ரேல்
பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூலை மாதம் 4, 5 மற்றும் 6 தேதிகளில் இஸ்ரேல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது இஸ்ரேலின் எதிரி நாடான பாலஸ்தீன நாட்டுக்கு செல்ல மாட்டேன் என்று தெரிவித்துள்ள மோடி, பாலஸ்தீன தலைவர்களை சந்தித்துப் பேசும் திட்டம் ஏதுமில்லை என்றும் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், 70 ஆண்டுகளுக்கு பின்னர் இஸ்ரேல் நாட்டுக்கு வருகை தரும் இந்திய பிரதமர் என்ற வகையில் மோடியை சந்தித்துப் பேசும் நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும், அவரது வருகையின்போது இந்தியா-இஸ்ரேல் இடையிலான 25 ஆண்டுகால நல்லுறவின் அடையாளமாக பாதுகாப்புத்துறை மற்றும் வர்த்தகம் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படும் என நம்புவதாகவும் அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இதற்கான ஒப்புதலை அந்நாட்டின் பாராளுமன்றம் கடந்த வாரம் அளித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் அதிபர் ரேவென் ரிவ்லின் மற்றும் அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஐசக் ஹெர்ஸோக் ஆகியோரையும் சந்தித்துப் பேசும் பிரதமர் மோடி, டெல் அவிவ் நகரில் வசித்துவரும் சுமார் 4 ஆயிரம் இந்தியர்களிடையே வரும் 5-ம் உரையாற்றவுள்ளார். 

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடியின் வருகை குறித்து மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 

அந்த ஆர்வத்தை மேலும் தூண்டும் வகையில் இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த குரல் கொடுத்த மோடியின் அபார எழுச்சி மற்றும் இந்தியாவின் பிரதமராக அவர் செய்துள்ள சாதனைகள் தொடர்பான செய்திகளை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடியின் இஸ்ரேல் வருகை தொடர்பாக அந்நாட்டின் பிரபல எபிரேய மொழி வர்த்தக நாளேடான ‘தி மார்க்கெர்’, ’விழித்திடுங்கள் இந்த உலகின் மிக முக்கியமான பிரதமர் வருகிறார்’ ("Wake up: the most important PM
of the world is coming") என்ற தலைப்பில் ஒரு சிறப்பு கட்டுரை தீட்டியுள்ளது.

அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:-

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இஸ்ரேல் வருகையின்போது நம் நாட்டு மக்கள் அவரிடம் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். ஆனால், அதற்கான பலன் ஏதும் பெரிதாக அமையவில்லை.

ஆனால், உலகின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியடைந்துவரும் நாடாக 125 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் பிரபலமான தலைவராக இருக்கும் பிரதமர் மோடியின் வருகை தற்போது நம்மிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
விழித்திடுங்கள் இந்த உலகின் மிக முக்கியமான பிரதமர் வருகிறார்.