Jun 17, 2017

முஸ்லிம் தலைவர்களின் இப்தார் அரசியல்!


விருட்சமுனி 

ரமழான் நோன்பு நோற்கும் இஸ்லாமியர்கள் மாலையில் நோன்பை முடித்து கொள்ளும் பொருட்டு உணவு உண்ணும் நிகழ்வான இப்தார் இன்றைய காலத்தில் இலங்கையில் அரசியல் கொண்டாட்டமாக விஸ்வரூபம் எடுத்து உள்ளது. 

குறிப்பாக தொழிலாளர் தினமான மே தினத்தை அரசியல் கட்சிகள் அவற்றின் பலத்தை காட்டுகின்ற நாளாக மாற்றி எடுத்ததை போல முஸ்லிம் அரசியல் கட்சிகள் அவற்றின் பலத்தை காட்டுகின்ற வைபவமாக மாத்திரம் அன்றி செல்வாக்கை கூட்டுகின்ற நிகழ்வாகவும் இப்தாரை கையாண்டு வருவதை கண்கூடாக காண முடிகின்றது. முஸ்லிம் அரசியல் தலைமைகளால் அவரவர் கட்சி சார்ந்த அரசியல் நிகழ்வாக இது நடத்தப்படுவதாலேயே கட்சியின் ஆதரவாளர்கள் மாத்திரம் அழைக்கப்படுவதுடன் எதிர் கட்சியை சார்ந்தவர்களால் கல்லெறிகளும், சொல்லெறிகளும் மாறி மாறி நடத்தப்படுகின்ற சம்பவங்களையும் கேள்விப்பட கூடியதாக உள்ளது. 

குட்டி அரசியல்வாதிகள் கட்சி தலைவர்களை திருப்திப்படுத்துவதற்காக இவ்வாறான இப்தார் வைபவங்களை தடல்புடலாக ஒழுங்கு பண்ணி நடத்துவதும் குறிப்பிடத்தக்கது. நாட்டில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்கின்ற கிழக்கு மாகாணம் இப்போது முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பிரசன்னத்தால் நிரம்பி வழிவதற்கு இப்தார் அரசியலே காரணம் ஆகும். உதாரணமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இப்தார் நிகழ்ச்சி சம்மாந்துறையில் இவரின் பங்கேற்பு காரணமாக களை கட்டியதோடு கடந்த வாரம் கிழக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் இப்தார் நிகழ்வுகளில் சூறாவளியாக இவர் கலந்து கொண்டார். 

விரைவில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற உள்ளூராட்சி சபை தேர்தல், கிழக்கு மாகாண சபை தேர்தல் ஆகியவற்றோடு இவ்வாறான இப்தார் விருந்துகளை தொடர்புபடுத்தி பார்க்க வேண்டி உள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூரில் கடந்த வியாழக்கிழமையும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீரால் அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனையில் மறுநாள் வெள்ளிக்கிழமையும் நடத்தப்பட்ட பிரமாண்ட இப்தார் விருந்துகள் நடத்தப்பட்டன. 

எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் அவருக்கு முதலமைச்சர் வேட்பாளர் நியமனம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் கிடைக்க பெறுவதை உறுதிப்படுத்துகின்ற முயன்றார் முதலமைச்சர் நஸீர் அஹமட். எதிர்வரும் செப்டெம்பர் மாத நடு பகுதியில் கிழக்கு மாகாண சபை கலைக்கப்படும். ஆனால் தேர்தலை நடத்தாமல் ஆளுனரின் ஆட்சியை தொடர விடுகின்ற திட்டம் அரசாங்கத்துக்கு உள்ளது என்று அரசியல் அவதானிகளில் சிலர் ஆரூடம் தெரிவிக்கின்றார்கள். இந்நிலையில் இடைப்பட்ட காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம். பியாக நியமனம் பெறுகின்ற திட்டம் ஒன்றும் நஸீர் அஹமட்டிடம் உள்ளது. இதே நேரம் கடந்த பொது தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் மர சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அலி சாஹிர் மௌலானா வேறு ஒரு கணக்கு போட்டு வைத்து உள்ளார். 

கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்ட பிற்பாடு அதற்கு இன்னொரு தேர்தல் நடத்தப்படுகின்ற வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் அதிகாரம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவிடமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி அமைச்சர் அமீர் அலியிடமும் போய் சேர்ந்து விடும், இதை தடுக்க வேண்டுமானால் மு. காவின் மட்டக்களப்பு மாவட்ட எம். பியான அவருக்கு பிரதி அமைச்சர் பதவி ஒன்றை தலைவர் ஹக்கீம் பெற்று தர வேண்டும் என்று தூண்டி கொண்டு இருக்கின்றார். ஆனால் அட்டாளைச்சேனைக்கு தேசிய பட்டியல் வழங்குவார் என்று ரவூப் ஹக்கீம் கடந்த பொது தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதி மூலமாக பாராளுமன்றம் செல்கின்ற முன்னெடுப்புகளிலும், முயற்சிகளிலும் அமைச்சர் நஸீர் ஈடுபட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எது எப்படி இருந்தாலும் தவிர்க்க முடியாத காரணத்தால் கடைசி தருணத்தில் கிழக்குக்கு ஹக்கீமால் வர முடியாமல் போய் விட்டது.


மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் முஸ்லிம்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் வன்செயல்கள் நாடு பூராவும் கட்டவிழ்த்து விடப்பட்டன என்பதும் இதனாலேயே கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றத்தை வேண்டி முஸ்லிம் மக்கள் வாக்களித்து எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி நல்லாட்சியை உருவாக்கினர் என்பதும் பழைய கதை. ஆனால் மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் வகை தொகை இன்றி நடந்தேறுவது தொடர்கதையாகி உள்ளது. மஹிந்த ராஜபக்ஸவின் காலத்தில் புதிதாக முளைத்து முஸ்லிம் விரோத செயற்பாடுகளை முடுக்கி விட்ட பொதுபலசேனாவின் பொது செயலாளர் ஞானசார தேரரின் நாசகார வேலைகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற இனவாத அமைச்சர்கள் ஊக்கிகளாக செயற்படுவதுடன் அவருக்கு அடைக்கலம் கொடுத்தும் வருகின்றனர் என்பதையே முஸ்லிம்கள் பிறை கண்ட பிற்பாடுகூட ஞானசார தேரர் இன்னமும் சிறை கண்டு விடவில்லை என்கிற உண்மை உணர்த்தி நிற்கின்றது. ஞானசார தேரரை கைது செய்ய போவதாக நல்லாட்சி அரசாங்கம் காட்டி கொண்டதை அடுத்து வன்செயல்களின் உக்கிரம் மெல்ல குறைந்தது போல தோன்றுகின்றது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் எம்.பிகள் 21 பேரும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்று சேர்ந்து அரசாங்கத்துக்கு எதிராக பாரிய அமுக்க குழுக்களாக செயற்பட போகின்றனர் என்கிற வலுவான சந்தேகத்தின் பின்னணியிலேயே வன்செயல்கள் தற்காலிக குறைக்கப்பட்டு இருக்கின்றன என்றே கொள்ள வேண்டி உள்ளது. ஞானசார தேரரை கைது செய்ய வேண்டும் என்று கோரி முஸ்லிம் எம்.பிகளில் ஒரு தொகையினர் பொலிஸ் தலைமையகத்தில் கூட்டாக முறைப்பாடு மேற்கொண்டதும், ஜனாதிபதியை ஒன்றாக சந்திக்க முஸ்லிம் எம்.பிகள் அனைவரும் நேரம் கோரி நின்றதும் அரசாங்க ஆதரவு பெற்ற முஸ்லிம் விரோத செயற்பாட்டாளர்களையும், முஸ்லிம் விரோத செயற்பாட்டாளர்களுக்கு அனுசரணை வழங்குகின்ற அரசாங்க முக்கியஸ்தர்களையும் அதிர்ச்சி அடைய வைத்து உஷார் பண்ணியது. குறிப்பாக சமூக நல அக்கறையின் பெயரில் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் ஆகியோர் சேர்ந்து செயற்பட கூடும் என்கிற நிலை அண்மித்தபோதே அடக்கி வாசிக்க தொடங்கினர். இவர்கள் எதிர்பார்த்தபடி இந்த மாய அமைதிக்குள் சிக்குண்டு கட்டுப்பட்டவர்கள் போல முஸ்லிம் எம்.பிகள் சரியான அடுத்த நகர்வுக்கு செல்லாமல் முடங்கி கிடக்கின்றனர். இருப்பினும் முஸ்லிம் விரோத பேரினவாத தீ அணைந்து விடாமல் நீறு பூத்த நெருப்பாகவே உள்ளது என்றும் அது எப்போது வேண்டுமானால் திடீரென்று மீண்டும் வீறு கொண்டு எழும் என்றும் முஸ்லிம் மக்கள் மிக நன்றாக உணர்ந்து வைத்திருக்கின்றனர். பள்ளிவாசல்களை தாக்குவதும், வர்த்தக நிலையங்களை எரிப்பதும், பஸ் வண்டிகளுக்கு கல் எறிவதும் போன்ற சொத்தழிப்பு நடவடிக்கைகள் ஒரேயடியாக ஆட்களை கண்ட இடத்தில் வெட்டி கொல்கின்ற அளவுக்கு இனி மேல் பரிணாமம் கண்டு விடலாம் என்கிற அச்சத்துடனேயே இவர்கள் தினமும் நோன்பு கால வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். கிறிஸ் பூதம் போன்றவை முஸ்லிம் வீடுகளுக்குள், பள்ளிவாசல்களுக்குள், வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்து மனித அழிவுகளை நடத்தலாம் என்கிற ஐயம் நியாயமானதுதான். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் என்றும் தேசிய நல்லிணக்க அரசாங்கம் என்றும் சொல்லி கொள்கின்ற இந்த அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கும், இராஜதந்திர வட்டத்துக்கும் நல்ல பிள்ளையாக அதை காட்டி கொள்ள இப்தார் விருந்தை பிரமாஸ்திரமாக கையில் எடுத்து உள்ளது. முஸ்லிம்களுடைய சமய உணர்வுகளையும், நோன்பு கால வழிபாடுகளையும் ஆட்சியாளர்களும், அரசாங்கமும் அங்கீகரித்து, அவற்றில் அவர்களும் பங்கேற்று, பரவசம் அடைகின்றார்கள் என்று வெளிக்காட்டுகின்ற இப்தார் விருந்து விழாவை ஜனாதிபதியும், பிரதமரும் சேர்ந்து எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் நடத்துகின்றனர். ஞானசார தேரர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கின்ற விடயத்தில் இழுத்தடிப்பு செய்கின்ற அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் ஒன்றை கொடுக்க முஸ்லிம் எம்.பிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாராளுமன்ற அமர்வுகளை பகிஷ்கரிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட எம். பி எம். எஸ். மரிக்கார் இரு வாரங்களுக்கு முன்னர் பகிரங்கமாக கோரி இருந்தார். இதை தொடர்ந்துதான் அதிர்ச்சி வைத்தியத்தின் முதல் கட்டமாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் இப்தார் விருந்து விழாவை முஸ்லிம் எம். பிகள் கூட்டாக புறக்கணிக்க வேண்டும் என்கிற கோஷம் முடுக்கி விடப்பட்டு உள்ளது. முன்னாள் எம்.பி அஸ்பரின் ஸ்ரீலங்கா முஸ்லிம் முற்போக்கு முன்னணி இதற்கான பிரசாரங்களை மும்முரமாகவும், தீவிரமாகவும் மேற்கொண்டு வருகின்றது. இக்கட்சியினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சேர்ந்தவர்கள் என்கிறபோதிலும் இவ்விடயத்தில் இவர்களின் பிரசாரம் ரொம்பவே எடுபட்டு உள்ளது. இதே நேரம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் நடத்துகின்ற இப்தாரை முஸ்லிம் எம். பிகள் புறக்கணிக்க வேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பான சூடான வாத பிரதிவாதங்கள் பேஸ்புக் சமூக இணைப்பு தளத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கின்றன. உலமா கட்சியின் தலைவர் முபாரக் மௌலவி, கிழக்கின் எழுச்சி இயக்கத்தின் ஸ்தாபக தலைவர் வஃபா பாருக் போன்றோர் புறக்கணித்தே ஆக வேண்டும் என்று அறுதியும் உறுதியுமாக கருத்துகளை பதிவேற்றி வருகின்றனர். வாத பிரதிவாதங்கள் மீதான பின்னூட்டங்களை பார்க்கின்றபோது புறக்கணித்தே ஆக வேண்டும் என்பதுதான் பெரும்பாலானவர்களின் விருப்பம் என்பது புரிகின்றது. ஆனால் இவ்விதம் முஸ்லிம் எம். பிகள் நடந்து கொள்ளவே மாட்டார்கள் என்று அதிகமானவர்கள் ஆதங்கத்துடன் எழுதுகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் இப்தாருக்கு செல்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளை முஸ்லிம் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுக்கு ஆதரவான குரல்கள் மிக ஓங்கி நிற்கின்றன. ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக அதீத வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த காலத்தில் அவர் ஜனாதிபதியாக இருந்து நடத்திய இப்தார் விருந்து விழாவில் முஸ்லிம் எம். பிகள் வெட்கம் இன்றி கலந்து கொண்டிருந்தனர் என்று மீள நினைவூட்டப்படுகின்றது. இதே நேரம் மஹிந்த ராஜபக்ஸவும், இவரின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான கோத்தாபய ராஜபக்ஸவும் சேர்ந்து கொழும்பில் கடந்த வியாழக்கிழமை நடத்திய இப்தார் விருந்து விழாவில் முஸ்லிம் பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் இப்தார் விருந்து விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றை சேர்ந்த முன்னிலை முஸ்லிம் அரசியல்வாதிகள் அவரவர் கட்சி தலைவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய மேற்கொள்கின்றனர் என்றும் சுதந்திர கட்சியை சேர்ந்தவர்களான அமைச்சர் பௌசி, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோர் இவ்விடயத்தில் ரொம்பவே பிஸியாக உள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. முஸ்லிம் மக்களின் தேசிய தலைவர் என்று சொல்லி கொள்வதில் பெருமை அடைகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவருடைய பரிவாரங்களையும் அழைத்து கொண்டு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் இப்தார் விருந்து விழாவில் நிச்சயம் தவறாமல் கலந்து கொள்வார் என்று தற்கால கள நிலைவரங்களும், கடந்த கால அனுபவங்களும் கூறுகின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், அக்கட்சியின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் முன்னாள் தலைவருமான எஸ். எல். எம். ஹனீபா மதனி சட்டபூர்வமான அரசாங்கம் நடத்துகின்ற நிகழ்வை புறக்கணிப்பதும், புறக்கணிக்க சொல்வதும் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் மாத்திரம் அல்ல அரசியல் ரீதியாகவும் ஆரோக்கியமான விடயம் அல்ல என்பதாக அறிக்கை விட்டிருப்பதுடன் கடந்த கால அரசாங்கத்தில் இன முரண்பாட்டு நடவடிக்கைகளும், வெறுப்பூட்டும் பேச்சுகளும் மிக உச்ச கட்டத்தை அடைந்திருந்தபோதுகூட ஜனாதிபதி போன்றோர் நடத்திய இப்தார்களுக்கு முஸ்லிம்கள் எவ்வித எதிர்ப்புகளையும் காட்டியிருக்கவில்லை என்று ஒரு காரணத்தை இவருடைய நிலைப்பாட்டுக்கு ஆதரவாக முன்வைத்து உள்ளார். தலைவர் ஹக்கீமின் மன கருத்தையே இவர் அறிக்கையாக வெளிக்கொணர்ந்து உள்ளார் என்பதை ஊகிப்பது ஒன்றும் கடினமான விடயம் அல்ல. சந்திப்புக்கு நேரம் ஒதுக்கி தர வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கூட்டாக கோரி இருந்தபோது நேரம் ஒதுக்கி கொடுக்காமல் அவசரமாக அவர் வெளிநாடு சென்றிருந்த நிலையில் இப்போது இப்தார் விருந்து விழா மூலமாக அவருடனான சந்திப்புக்கு சந்தர்ப்பம் கிடைத்து இருப்பதை ஏன் தவற வேண்டும்? என்றெல்லாம்கூட முஸ்லிம் எம். பிகள் காரண தொடர்புகளை கற்பித்து கொண்டு ஜனாதிபதியும், பிரதமரும் நடத்துகின்ற வைபத்தில் கலந்து கொள்வார்கள் என்பது பொதுவான அனுமானமாக உள்ளது. முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெறுவதும், சிங்கள ஆட்சியாளர்களை அரவணைத்து அரசியலை தொடர்வதும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் வழக்கமான விருப்பமான போக்கு ஆகும். முஸ்லிம் தலைவர்களை பொறுத்த வரை அவர்களின் அரசியல் வாழ்வாதாரத்தில் இது ஒரு மிக முக்கியமான தருணம் ஆகும். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் தனிப்பட்ட அன்புக்கு பாத்திரமாக முடியும்.
இந்தியாவில் கேரளா மாநிலத்தில் உள்ள விஷ்ணு ஆலயம் ஒன்றில் அண்மையில் 400 முஸ்லிம்களுக்கு இப்தார் விருந்து வழங்கப்பட்டது. முஸ்லிம்கள் இதில் பங்கேற்று மரக்கறி சாப்பாட்டை மனமார சாப்பிட்டனர். இதே போல இலண்டனில் கிராண்ட்பெல் குடியிருப்பில் சில தினங்களுக்கு முன் இடம்பெற்ற தீவிபத்தில் அவர்களை காப்பாற்றிய முஸ்லிம்களுக்கு குடியிருப்புவாசிகள் இப்தார் வைத்து நன்றி கடன் செலுத்தினார்கள். இவை அளவுக்கு நல்லிணக்க சம்பவங்கள் இலங்கையில் இன்னமும் இடம்பெறவில்லையாயினும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் போரம் நடத்திய வருடாந்த இப்தார் ஒன்றுகூடல் சற்று வித்தியாசமானதாக அமைந்தது. அக்கரைப்பற்றில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம், தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக சேவையாளர்கள், அரசாங்க உயரதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். எவரும் இவ்விழாவுக்கு பிரதம விருந்தினராக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அத்துடன் அரசியல்வாதிகள் எவரும் உரையாற்ற அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. அரசியல் எதிரிகள் என்று வர்ணிக்கப்படுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா ஆகியோரை இந்த இப்தார் ஒன்றுகூடல் ஓரளவுக்கு இணைத்து வைத்தது. அதே போல கிழக்கு மாகாண முஸ்லிம் தலைமைகளால் கடுமை போக்காளர் என்று வர்ணிக்கப்படுகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் இந்த இப்தார் ஒன்றுகூடலில் பங்கேற்று நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தார். கிழக்கு மாகாணத்தில் உள்ள கண்ணகி அம்மன் கோவில்களில் வைகாசி மாத வருடாந்த திருக்குளிர்த்தி சடங்குகள் இடம்பெற்று வந்த நிலையில் இவர் இந்த இப்தார் ஒன்றுகூடலில் பங்கேற்றது உண்மையிலேயே மகத்தான விடயம் ஆகும். அம்பாறை மாவட்டத்தில் தமிழ் – முஸ்லிம் உறவு எதிர்காலத்தில் செழுமை பெறும், இம்மாவட்டத்தில் இரு இனங்களுக்கும் இடையில் நிலவி வருகின்ற அரசியல், நிர்வாக, காணி பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்கிற நம்பிக்கையை இது கொடுத்து உள்ளது. ஆனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரோடு அக்கட்சியின் கிழக்கு மாகாண முக்கியஸ்தர்கள், தேசிய காங்கிரஸ் தலைவரோடு அக்கட்சியின் முக்கியஸ்தர்கள், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதி, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றின் அமைப்பாளர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவுத், இக்கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசன் அலிக்கு ஆதரவான மாற்று குழுவினர், ஹசன் அலியின் பிரதிநிதியாக அவரின் புதல்வர் அலிப் சப்ரி போன்ற அரசியல்வாதிகளுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரைகூட இந்த இப்தார் ஒன்றுகூடலில் காண முடியாமல் போனது ஆச்சரியத்தை கொடுத்தது. நாம் இது குறித்து போரத்தின் செயலாளர் எம். சஹாப்தீனிடம் வினவியபோது போரத்தின் வருடாந்த இப்தார் ஒன்றுகூடல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் கடந்த காலங்களில் பங்கேற்று வந்துள்ளனர், மு. கா தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் இக்கட்சியின் இக்கிழக்கு மாகாண முக்கியஸ்தர்கள் ஆகியோர் இம்முறையும் ஒன்றுகூடலுக்கு முறையாக அழைக்கப்பட்டனர், நேரிலும் பலருக்கு அழைப்புகள் வழங்கப்பட்டன, இவர்களில் அநேகமானவர்கள் வருவார்கள் என்று உறுதிமொழி தந்திருந்தபோதிலும் ஒருவர் வரவே இல்லை, எனவே கட்சி தலைமை இவர்களை மறித்து இருக்க வேண்டும் என்கிற முடிவுக்கே வர நேர்ந்து உள்ளது என்றார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் , அவருடைய ஆட்களும் போரத்தின் இந்த இப்தார் ஒன்றுகூடல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியலுக்கு எதிரானது என்கிற முடிவின் அடிப்படையிலேயே வராமல் தவிர்த்து உள்ளனர் என்பது விளங்குகின்றது.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network