அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீது விசாரணைஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்பின் வெற்றிக்காக ரஷியா தலையீட்டதா என்பது தொடர்பாக அந்த நாட்டு உளவுத்துறையின் (எப்.பி.ஐ) முன்னாள் இயக்குனர் ராபர்ட் முல்லர் நடத்தி வருகிற விசாரணை சூடுபிடித்து வருகிறது.

ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய அமெரிக்க உளவுத்துறையின் மற்றொரு முன்னாள் இயக்குனர் ஜேம்ஸ் கோமி, “முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின் மீதான ரஷிய தொடர்பு குறித்த விசாரணையை கைவிடுமாறு டிரம்ப் எனக்கு அழுத்தம் தந்தார்; மேலும், இதில் தன்னை விசாரணைக்கு உட்படுத்தவில்லை என்று பகிரங்கமாக கூறுமாறும் டிரம்ப் கேட்டுக்கொண்டார்” என்று கூறினார்.

இது நீதியைத் தடுக்கும் விதத்தில் டிரம்ப் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஜேம்ஸ் கோமி, எப்.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, ரஷிய விவகாரத்தில் நீதிக்கு இடையூறாக, நீதியை தடுக்கிற வகையில் டிரம்ப் செயல்பட்டாரா என்பது பற்றி ராபர்ட் முல்லர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருவதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

டிரம்ப் மீது ஏற்கனவே அமெரிக்க அரசு வக்கீலாக பணியாற்றி நீக்கப்பட்ட பிரித் பராரா, இத்தகைய குற்றச்சாட்டை கூறி இருந்தது நினைவுகூரத்தக்கது.

இந்த விவகாரத்தில் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குனர் டேனியல் கோட்ஸ், தேசிய பாதுகாப்பு முகமையின் தலைவர் மைக் ரோஜர்ஸ், அவரது உதவியாளராக செயல்பட்ட ரிச்சர்டு லெட்கெட் உள்ளிட்டவர்களிடம் இந்த வாரம் ராபர்ட் முல்லர் குழுவினர் விசாரணை நடத்துவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.