யாழில் முச்சக்கரவண்டியில் திருட முயன்ற திருடன் -பொதுமக்களால் நையப்புடைப்புபாறுக் ஷிஹான்- முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் உள்ள  முச்சக்கர வண்டிகளில் அண்மைக்காலமாக  திருடி வந்த இளைஞர் ஒருவரை பொதுமக்கள் நையப்புடைத்தனர்.

யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள    முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இன்று (9) காலை  திருடிய வேளை  முச்சக்கர வண்டி  உரிமையாளரால் கையும் களவுமாக இளைஞர் ஒருவர்    பிடிபட்டார்.

குறித்த முச்சக்கரவண்டி  உரிமையாளர் தனது முச்சக்கரவண்டியை  நிறுத்திவைத்திருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் இன்னோரு  ஓட்டுனருடன் கதைத்துக்கொண்டிருந்த சமயம் தனிமையிலிருந்த ஆட்டோவிற்குள் குறித்த இளைஞன்    புகுந்து  எதையோ தேடியுள்ளார்.

இந்நிலையில்   எதிர்பாராத விதமாக தனது முச்சக்கர வண்டியை  திரும்பி பார்த்த உரிமையாளரிற்கு நிலைமை விளங்கியது.உடனடியாக தனது நண்பர்களுடன் முச்சக்கரவண்டியின்  பின்புறமாக வந்து திருட முயற்சி செய்த இளைஞனை   பிடித்துள்ளார்.

பின்னர் குறித்த இளைஞன் அணிந்திருந்த     சட்டையை கழற்றி கையை  பின்புறமாக கட்டி மரத்தடியில் அமர்த்தி பொலிசாரிற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

மேலும் பிடிபட்ட இளைஞனை  பொதுமக்கள் சிலர் அடித்ததை காண முடிந்தது.


இதேவேளை இப்பகுதியில் அடிக்கடி இதுபோல சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும்  சுலபமாக திருடர்கள்   வந்து பற்றரி மற்றும் வானொலி பெட்டி போன்ற உபகரணங்களை திருடி செல்வதாகவும் அங்கு கூடியிருந்த  முச்சக்கர வண்டி   ஓட்டுனர்களால் கவலை வெளியிடப்பட்டுள்ளது