விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி



(எஸ்.அஷ்ரப்கான்)

இனங்களுக்கிடையில் நல்லுறவையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துகின்ற திருநாளாகவும் முஸ்லிம் சமூகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்துகின்ற நன்னாளாகவும் புனித நோன்புப் பெருநாள் அமையவேண்டுமென எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிரதி அமைச்சர் ஹரீஸ் அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,

ஓரு சில விசமிகளினால் திட்டமிடப்பட்டு முஸ்லிம்களுக்கெதிராக நாட்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ள அசாதாரன நிலை மாறி இன,மத வேறுபாடுகள் இன்றி சகோதர வாஞ்சையோடு ஒரு தேசத்து மக்களாக ஒற்றிணைந்து இந்நாட்டில் வாழ்வதற்கும் முஸ்லிம்களுக்கு உலகலாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள ஆபத்துக்கள் நீங்கி ஒற்றுமைப்படுவதற்கும் இப்புனித பெருநாள் தினத்தில் அனைவரும் பிரார்த்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

இஸ்லாம் மார்க்கம் வலியுறுத்துகின்ற அனைத்து நற்செயல்களையும் ஞாபகப்படுத்தும் மாதமாக புனித றமழான் மாதம் அமைகின்றது. அந்த வகையில் நோன்|பு காலத்தில் புடம்போடப்பட்டு எம்மில் ஏற்படுத்தப்பட்ட நல்ல மாற்றங்கள் புனித நோன்புப் பெருநாள் தினத்தோடு விடைபெற்றுவிடாமல் எமது வாழ்நாள் முழுவதும் தொடர்வதற்கும் நோன்பு காலத்தில் செய்த நல்லமல்கள் இறை ஏற்றத்தைப் பெற்று மறுமையில் ஈடேற்றத்தை பெறுவதற்கும் இறைவன் அனைவருக்கும் அருல் புரிய வேண்டுமென பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.