முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் - அதா


எம்.எஸ்.எம்.ஹனீபா
'முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு  உள்நாட்டில் நீதி கிடைக்காவிடின், ஜெனீவாவரை சென்று நீதி கேட்பதற்கும் நாங்கள் தயங்கப் போவதில்லை” என, கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 
'வேண்டுமெனில், அமைச்சுப் பதவியைத் தூக்கி எறிவதற்கும் தயாராக இருக்கின்றேன்” எனவும் அவர் கூறினார்.
இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு, சாய்ந்தமருதில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக்  கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'முஸ்லிம் சமூகத்தின் மீதான வன்முறைகளும் தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று, ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் சட்டம், ஒழுங்கை நிலை நாட்டும் அத்தனை பேரிடமும், முஸ்லிம் அரசியல் சக்திகளும் சமூக இயக்கங்களும், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆணித்தரமாகவும் பக்குவமாகவும் வலியுறுத்தியுள்ளன. இருந்தபோதும், நாசகாரிகளின் நடவடிக்கைகள், இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
"அமைச்சுப் பதவியை வகிப்பதால், நாங்கள் அடங்கிப்போக வேண்டும் என்று, எவரும் தப்புக்கணக்குப் போட முடியாது. எமது  சமூகத்துக்கான பாதிப்புகள் நிறுத்தப்படும்வரை, நாங்கள் ஓயப்போவது இல்லை” என்றார்.
'வன்முறைகள் மீது என்றுமே நாட்டம் கொள்ளாத இந்தச் சமூகத்தை, பொறுமை இழக்கச் செய்து, இன்னுமோர் அழிவுக்கு இந்த நாட்டை இட்டுச் செல்வதற்கு, இனவாதிகள் துடியாகத் துடிக்கின்றார்கள். இதன் மூலம், முஸ்லிம்களின் பலத்தையும் பொருளாதார வளத்தையும் ஒட்டுமொத்தமாகத் தகர்ப்பதே, இனவாதிகளின் உள்நோக்கமாக இருக்கின்றது.
'இந்த அரசாங்கமானது, இவர்களின் நாசகாரச் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்” என்றார்.