Jun 7, 2017

கட்டார் நாட்டுடனான உறவை ஐந்து நாடுகள் கத்தரித்தது ஏன்?சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், யேமன் ஆகிய ஐந்து நாடுகளும் கட்டார் நாட்டுடனான தமது அரசுறவியல் தொடர்புகளை 2017 ஜூன் 5-ம் திகதி துண்டித்தமை மேற்காசியாவில் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டார் அரசு பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கின்றது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டாருக்கான உணவு விநியோகத்தில் பெருமளவு சவுதி அரேபியாவினூடாக நடைபெறுகின்றது. அந்த விநியோகம் தடைபட்டுள்ளது. இந்த ஐந்து நாடுகளும் கட்டார் நாட்டினுடனான கடல், வான் மற்றும் தரைப் போக்கு வரத்துக்களையும் துண்டித்துள்ளன.
ஈரானா இஸ்ரேலா?
வளைகுடாக் கூட்டுறவுச் சபையில் (The Gulf Cooperation Council -GCC) உள்ள பாஹ்ரேன், குவைத், ஓமான், கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் ஆகிய ஆறு நாடுகள் இருக்கின்றன. இவையாவும் அமெரிக்காவுடன் நல்ல உறவைப் பேணும் மன்னர்களால் ஆளப்படுபவை. இவற்றில் ஓமானும் குவைத்தும் கட்டாருடன் தமது அரசுறவைத் துண்டிக்கவில்லை. குவைத் மன்னர் நிலைமையை மோசமாக்க வேண்டாம் என கட்டார் மன்னரிடம் வேண்டு கோள் விடுத்துள்ளார். இந்த நாடுகளிற் பல இஸ்ரேலுடன் இரகசிய உறவை வைத்துள்ளன. இந்த மன்னர்களுக்கு எதிரான தீவிரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான பல உளவுத்தகவல்களை இஸ்ரேல் அவர்களுக்கு வழகிக் கொண்டிருக்கின்றது. ஈரானிய ஆட்சியாளர்கள் போல் இந்த மன்னர்கள் இஸ்ரேலை ஒழித்துக் கட்ட வேண்டும் என செயற்படுவது கிடையாது. பலஸ்த்தீனிய விடுதலைப் போருக்கு இந்த மன்னர்களின் ஆதரவு குறைந்து கொண்டே போகின்றது. இந்த மன்னர்கள் எதிரியாகப் பார்ப்பது ஈரானை மட்டுமே. அங்கு உள்ள மதவாத ஆட்சி தமது நாட்டிலும் ஒரு புரட்சி மூலம் பரவலாம் என்பதே இவர்களது பெரும் அச்சம். அதற்காக ஈரானை அடக்குவதில் அதிக முனைப்புக் காட்டுகின்றார்கள். இஸ்ரேலுடன் இரகசியமாக இணைந்து இவர்கள் ஈரானுக்கு எதிராகச் செயற்படுகின்றார்கள்.
செல்வந்த நாடு
பாரசீகக் கடலில் உள்ள சிறு குடாநாடு கட்டார். அதன் தென்புறம் சவுதி அரேபியாவுடன் நிலத் தொடர்புடையது. 11,400 சதுர கிலோ மீட்டரில் 27 இலட்சம் மக்களைக் கொண்ட கட்டார் நாடு அங்கு எரிபொருள் வாயு இருப்பு 1939இல் கண்டறியப்படும் வரை ஒரு மீன் பிடிக் கிராமம் போல் இருந்தது. மீன் பிடித்தலும் முத்துக் குளித்தலும் அங்கு நடைபெற்றன. உலகிலேயே அதிக அளவு எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடு கட்டார். தற்போது அது உலகிலேயே தனிநபர் வருமானத்தில் முதலிடத்தில் இருக்கின்றது. அதன் தனிநபர் வருமானம் $140,649. கட்டாரிய மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு வேலை வாங்கப்படுகின்றார்கள் என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்படுகின்றது. 2003-ம் ஆண்டு 98 விழுக்காடு மக்களின் ஆதரவைப் பெற்ற அரசியலமைப்பு கட்டாரை ஓர் அரசமைப்பு மன்னராட்சி நாடாக்கியது.
நோர்வே பாதி சுவிஸ் பாதி
கட்டார் தனது வெளியுறவுக் கொள்கையை நோர்வே போலவும் சுவிஸ் போலவும் மாற்றுவதாக நினைத்துக் கொண்டு செயற்படுகின்றது. ஆனால் கட்டாரில் அமெரிக்கப் படைத்தளம் உள்ளது சிரியாவிலும் ஈராக்கிலும் அமெரிக்கா நடத்தும் வான் தாக்குதல்களில் பெருமளவு கட்டாரில் இருந்தே நடத்தப்படுகின்றது. கட்டார் பல அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுசரணை வழங்குகின்றது. அதன் மூலம் உலக அரங்கில் தனது செல்வாக்கை நிலை நிறுத்த முயல்கின்றது. உலகில் தனது செல்வாக்கை நிலைநாட்டவே கட்டார் அல் ஜசீரா தொலைக்காட்சியை ஆரம்பித்தது.  சிரியாவில் அமெரிக்காவின் படை நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கினாலும் கட்டார் அதிபர் பஷார் அல் அசாத்துடன் உறவைக் கொண்டுள்ளது. அவருக்கு ஒரு தனிப்பட்ட விமானத்தையும் அது வழங்கியிருந்தது. ஆனால் கட்டார் ஈரானுடனும் உறவை வளர்ப்பதுதான் அதன் ஆபத்துகளில் முக்கியமானவை. டொனால்ட் டிரம்ப் சவுதி அரேபியாவிற்கு தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டதும் அங்கு மன்னர்களுடன் ஆடிப்பாடினதும் சவுதி அரேபியாதான் அந்தப் பிராந்தியத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதை அமெரிக்கா விரும்புவதைச் சுட்டிக்காட்டியது. இது அங்கு ஒரு தலைமைத்துவப் போட்டியையும் உருவாக்கியுள்ளது. எகிப்தில் நடந்த அரபு வசந்த எழுச்சியின் பின்னர் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு கட்டார் ஆதரவு வழங்கியமை எகிப்தையும் சவுதியையும் ஆத்திரபப்டுத்தியது உண்மை. . 2022-ம் ஆண்டு உலகக் காற்பந்தாட்டப் போட்டி கட்டாரில் நடக்கவிருக்கின்றது. அது இந்த அரசுறவுத் துண்டிப்பால பாதிக்கப்படலாம்.
அமெரிக்காவிற்கு சிக்கலா
ஐக்கிய அமெரிக்கா வளைகுடா கூட்டுறவு நாடுகளின் உதவியுடன் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களுக்கு எதிரான தனது படை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை அவற்றின் மேற்காசியக் கொள்கையில் முக்கிய இடம் வகிப்பவை:
  1. இஸ்ரேலின் இருப்பையும் கிறிஸ்த்தவ புனித நிலையங்களையும் பாதுகாத்தல்.
  2. எரிபொரு விநியோகம் தடையின்றி நடத்தல்.
  3. மத்திய தரைக்கடலினூடான போக்குவரத்து சீராக இருத்தல்
கட்டார் ஈரானுடன் உறவை வளர்ப்பது இஸ்ரேலுக்கு ஆபத்தான ஒன்றாகும். அதை அமெரிக்கா விரும்பவில்லை.
ஐந்து நாடுகளும் அரசுறவைத் துண்டித்தவுடன் கட்டார் அரசு தனது நாட்டுக்கு எதிராக இணையவெளிக்குற்றம் இழைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேல் கட்டார் அரசின் கணினிகளை ஊடுருவி தகவல்களைத் திருடி இந்த ஐந்து நாடுகளுக்கும் வழங்கியதா என்ற ஐயம் எழுகின்றது.
கட்டார் அரசு ஈரானுடன் உறவை வளர்க்கின்றது, இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு உதவுகின்றது, கமாஸ் அமைப்பிற்கு உதவுகின்றது ஆகியவை தொடர்பான உறுதியான தகவல்கள் கிடைத்த படியால் இந்த ஐந்து நாடுகளும் ஆத்திரம் அடைந்துள்ளன. மேலும் கட்டார் மன்னர் டொனால்ட் டிரம்ப் இன்னும் சில காலம்தான் பதவியில் இருப்பார். அதனால் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாடு நீடிக்காது எனக் கூறினார் என்ற இரகசியமும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. லிபியாவில் உள்ள தீவிரவாதக் குழுக்களுக்கு கட்டார் ஆதரவு வழங்குவதை எகிப்தும் துருக்கியும் கடுமையாக எதிர்க்கின்றன. 2013-ம் ஆண்டு தலிபானின் தூதுவரகம் கட்டார் தலைநகர் டொஹாவில் திறக்கப்பட்டது. . சவுதி அரேபியாவின் ஒரு நிழல் நாடாக கட்டார் இருக்க வேண்டும் எனது சவுதி மன்னர்களின் நீண்ட நாள் விருப்பம். ஆனால் கட்டார் தனது செல்வத்தை வைத்து தனித்துவமாக இயங்க முடிவு செய்தது.
அல் கெய்தாவிற்கு கப்பம் செலுத்திய கட்டார்
2017 ஏப்ரல் மாதம் அல் கெய்தா அமைப்பின் இணைக்குழுவான Tahrir al-Sham
ஈராக்கில் வேட்டைக்குச் சென்றிருந்த கட்டார் மன்னர் குடும்ப உறுப்பினர் ஒருவரையும் அவரது பரிவாரத்தினரையும் கைது செய்து வைத்திருந்தது. அவர்களை மீட்க கட்டார் அரசு அந்தக் குழுவினருக்கு ஒரு பில்லியன் டொலர்களை கப்பப் பணமாகச் செலுத்தியது என இலண்டனில் இருந்து வெளிவரும் ஃபினான்சியல் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பணயக் கைதிகளாகைப் பிடித்து வைத்திருப்பவர்களுக்கு எதிராக படைநடவடிக்கை மட்டுமே செய்ய வேண்டும் பணம் கொடுத்து மீட்கக் கூடாது என்பதில் மேற்கு நாடுகள் உறுதியாக இருக்கின்றன. அதனால் கட்டார் மீது மேற்கு நாடுகள் கடும் ஆத்திரம் கொண்டுள்ளன. ஏற்கனவே அல் ஜசீரா ஊடகத்தால் மேற்கு நாடுகள் கடும் பொறாமையும் விசனமும் அடைந்துள்ளன.
கட்டாருக்கு இப்போது இரண்டு தெரிவுகள் உள்ளன. ஒன்று மேற்கு நாடுகளுடனும் அயல் நாடுகளுடனும் முரண்டு பிடித்து ஈரானுடன் இணைதல். ஈரானில் இருந்து தனக்குத் தேவையான பொருட்களை கடல் வழியாக இறக்குமதி செய்தல். இது கட்டாரை ஈரானில் தங்கி இருக்கும் ஒரு நாடாக மாற்றிவிடும். இரண்டாவது தெரிவு நடந்தவற்றிற்கு மன்னிப்புக் கேட்டு மீண்டும் மேற்கு நாடுகளுடனும் அயல் நாடுகளுடனும் உறவை வளர்த்தல்.
2017-06-06 பிரித்தானிய நேரம் காலை 11 மணிக்கு வெளிவந்த செய்திகளின் படி கட்டாரின் வெளியுறவுத் துறை அமைச்சர் நிலைமையைச் சீராக்கும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும்படி குவைத் மன்னரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post