மர்ஹூம் முஸ்தபா சேரின் மறைவு குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்திஅட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் ஓய்வு நிலை சிரேஷ்ட விரிவுரையாளரும் பிரபல விளையாட்டு வீரரும் இலங்கைச் சாரணிய அமைப்பில் பல்வேறு பதவிநிலைகளைவகித்தவருமான எம்.ஐ.எம்.முஸ்தபா அவர்கள் காலமான செய்தி கேட்டு தான் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உதைப்பந்தாட்ட பயிற்சியாளராகவும், மாணவர்களின் மெய்வல்லுனர் விளையாட்டுக்களில் பயிற்சியாளராகவும், மிகப்பரந்த அளவில் சேவையாற்றியுள்ள அன்னாரின் இழப்பு நாடெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்களையும் விளையாட்டு பிரியர்களையும் கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
தலைவர் அஷ்ரப் அவர்களின் பாடசாலைத் தோழரான இவர் அவருடன் சேர்ந்து கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் மாணவர் கையெழுத்து சஞ்சிகையை வெளியிடுவதற்கு மிகவும் பாடுபட்டார். அத்துடன் அக்கல்லூரியில் தலைவர் அஷ்ரப் மாணவராக இருந்த போது  உருவாக்கிய கலை எழுச்சிக் கட்சியில் முக்கிய பதவிநிலை உறுப்பினராகவும் இருந்து செயற்பட்டுள்ளார்.
விளையாட்டுத்துறையின் சிறந்த ஊடகவியலாளராகவும் விசேடமாக விளையாட்டுத்துறை எழுத்தாளராகவும் இவர் நீண்டகாலம் பணியாற்றியுள்ளார். பொதுவான ஊடகவியல் செயற்பாட்டிலும் மிகுந்த அற்பணிப்புடன் சேவையாற்றினார்.
அன்னாரின் இழப்பினால் துயருறும் அவரின் குடும்பத்தாரினதும், விளையாட்டு பிரியர்களினதும், கல்விமான்களினதும் துயரில் தானும் பங்கு கொள்வதோடு அவரின் ஆன்மீக ஈடேற்றத்திற்கு பிரார்த்திப்பதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.