Jun 27, 2017

இந்திய எல்லைக்குள் புகுந்து சீன படைகள் அத்துமீறல்



புதுடெல்லி: சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தினர் அத்துமீறி 2 பதுங்கு குழிகளை சேதப்படுத்தினர். இதன் காரணமாக இந்திய-சீன எல்லையில் திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கில் சிக்கிம் மாநிலத்தை ஒட்டி, இந்தியா-சீன எல்லை அமைந்துள்ளது. வரையறுக்கப்படாத இந்த எல்லையில், இரு நாட்டு ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதில், சீன ராணுவத்தினர் எல்லை தாண்டி, இந்திய பகுதிக்குள் அத்துமீறுவது அவ்வப்போது நடந்து வருகிறது. கடந்த 10 நாளாக சீன ராணுவத்தினர் சிக்கிம் எல்லையில் அத்துமீறுவதாக இந்திய ராணுவ அதிகாரிகள் நேற்று தகவல் தெரிவித்துள்ளனர். சிக்கிமின் டோகா லா பகுதியில் 10 நாட்களுக்கு முன் சீன ராணுவத்தினர் எல்லை தாண்டி வந்துள்ளனர்.

 உடனடியாக இந்தியா தரப்பில் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எச்சரிக்கையை மீறி சீன ராணுவத்தினர் தொடர்ந்து முன்னேறி உள்ளனர்.

இதன் காரணமாக, இரு தரப்பிலும் லேசான கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சீன ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர். அப்போது சீன ராணுவத்தினர், இந்திய வீரர்களை வீடியோ எடுத்தும், புகைப்படம் எடுத்தும் திரும்பிச் சென்றுள்ளனர். 

மேலும் அவர்கள், லால்டன் பகுதியில் 2 பதுங்கு குழிகளை சேதப்படுத்தியுள்ளனர். சீன ராணுவத்தின் அத்துமீறலை தடுக்க, எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் கைகளை கோர்த்து மனித தடுப்பு சுவர் அமைத்திருப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து கடந்த 20ம் தேதி இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளின் கொடி அணிவகுப்பு கூட்டம் நடத்தது. இதில், எல்லையில் அத்துமீறல் குறித்து பேசப்பட்டது. ஆனாலும், அதன் பிறகும் அத்துமீறல்கள் தொடர்வதால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

இதற்கிடையே, சிக்கிமின் நாதுலா பகுதி வழியாக கைலாஷ் மானசரோவருக்கு சென்ற யாத்ரீகர்களை சீன ராணுவம் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி உள்ளது. திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு ஆண்டுதோறும் ஆன்மிக பயணிகள் செல்கின்றனர். சிக்கிமின் நாதுலா வழியாக சீன எல்லையை கடந்துதான் கைலாச மலைக்கு செல்ல முடியும். 

2015ல் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, சீனா தனது எல்லைவழியாக யாத்ரீகர்கள் செல்ல அனுமதி வழங்கியது. இந்தாண்டுக்கான 50 பேர் கொண்ட முதல் குழு நாதுலா வழியாக சென்றபோது, அவர்களை கடந்த 19ம் தேதி எல்லையில் சீன ராணுவத்தினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். 23ம் தேதி வரை அங்கேயே காத்திருந்த பக்தர்கள், பின்னர் சிக்கிம் தலைநகர் கேங்டாக்குக்கு திரும்பினர். சமீபத்தில் சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பாலம் ஒன்று இடிந்துள்ளதாகவும், அதன் காரணமாக, கைலாஷ் மானசரோவர் யாத்திரீகர்கள் தொடர்ந்து செல்ல முடியாத காரணத்தால் அனுமதிக்கப்படவில்லை என்றும் சீன தரப்பில் கூறப்பட்டுள்ளது.

1962ம் ஆண்டு இந்திய, சீன போருக்கு பிறகு இரு நாட்டு எல்லைப் பிரச்னை தீர்க்க  முடியாத விவகாரமாக இருந்து வருகிறது.  அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத்  என சீனா  சொந்தம் கொண்டாடுகிறது. லடாக்கின் சில பகுதிகளையும் ஆக்ரமித்துள்ளது. எல்லை பிரச்னையை தீர்க்க 1990ம் ஆண்டு முதல் இதுவரை 20 முறை  பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் அவ்வப்போது எல்லை  தாண்டுதல் தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

முதல் முறை அல்ல சிக்கிம்-பூடான்-திபெத் ஆகியவற்றின் சந்திப்பு மையமான டோகா லா பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன், 2008ம் ஆண்டு நவம்பரில் சீன படையினர் எல்லை தாண்டி வந்து, இந்திய வீரர்களின் தற்காலிக முகாம்களை சேதப்படுத்திவிட்டு சென்றனர். 

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network