முழங்காவிலில் களவு கிராம சேவகரின் கணவர் கைதுபாறுக் ஷிஹான்-

கிளிநொச்சி   முழங்காவில் பொலிஸ் பிரிவில்  நாச்சிக்குடாப் பகுதியில் இடம்பெற்ற திருட்டில் ஈடுபட்ட அரசியல் வாதியின் மகன் உள்ளிட்ட திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முழங்காவில் பொலிஸ் பிரிவில்  கடந்த  செவ்வாய்க் கிழமை இரவு நாச்சிக்குடாப் பகுதியில் இடம்பெற்ற திருட்டில் 10 பவுண் தங்க நகைகளும் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபா பணமும் களவாடப்பட்டமை தொடர்பாக   பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டில்   அப் பிரதேசத்தில் இருந்த      வீட்டினைப் பூட்டிய பின்பு அனைவரும்  இரவு 8 மணியளவிலேயே வெளியில் சென்றிருந்த சமயம் பார்த்து உட்புகுந்தவர்களால்   திருட்டு இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது எனவும் இதன்போது வீட்டில் வைத்திருந்த 10 பவுண்  தங்க நகைகள்   2 லட்சத்து 40 ஆயிரம் ரூபா பணம் மற்றும்   கைத்தொலைபேசி  ஒன்றும்  களவாடப்பட்டிருந்ததாக அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 இதனையடுத்து வீட்டின் உரிமையாளரின்  தகவலையடுத்து முழங்காவில் பொலிசார் துரிதமாகச் செயல்பட்ட தொடங்கி இருந்தனர்.

இதன் பிரகாரம் தொலைபேசி கொள்வனவு செய்யப்பட்ட சிட்டையினை வீட்டு உரிமையாளரிடம்  பெற்ற பொலிசார் குறித்த போனின் இமி இலக்கத்தினை வைத்து அந்த தொலைபேசி இயங்கும் இடத்தினை கண்டறிந்தனர் .

 குறித்த போன் வீட்டில் இருந்த போது    நிறுத்தி  வைத்திருந்த  போதும் களவாடப்பட்டதன் பின்பு ஓர் இலக்கத்துடன் இயங்கியுள்ளமையும் கண்டறியப்பட்டது. 

இதனையடுத்து துரிதமாக  செயல்பட்ட பொலிசார் தொலைபேசியை வைத்திருந்தவரை மடக்கி பிடித்ததுடன்  அந்த தொலைபேசியினை வழங்கியவர் தொடர்பாக  தகவல்கள் பெறப்பட்டது.

இத் தகவல்களின் அடிப்படையில் திருடன் இனங்  காணப்பட்டதுடன்  மற்றுமொருவரும்  இணைந்து திருட்டில் ஈடுபட்டதாக  கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும்   இடம்பெற்ற விசாரணையை அடுத்து களவாடப்பட்ட நகைகள் முழுமையாகவும் பணம் 2 லட்சத்து 30 ஆயிரமும் ஓர் மையவாடியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது.

 இருப்பினும் 10 ஆயிரம் ரூபா பணம் அதில்  செலவு செய்யப்பட்டிருந்தது.

 களவு இடம்பெற்று  24 மணிநேரத்தில் முழங்காவில் பொலிசார்  மேற்கொண்ட துரித முயற்சியின் பலனாக  திருட்டில் ஈடுபட்டவர்கள் திருடப்பட்ட பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட திருடனின் தந்தையார் இறுதியாக இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வெற்றிலைச் சின்னத்தில் பூநகரி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்ததுடன்  திருடனின் மனைவியே இப் பிரதேசத்தின் கிராமசேவகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.