Jun 19, 2017

மஹிந்தவும் மகனும் களத்தில்மஹிந்த ராஜபக்‌ஷ முஸ்லிம்களுக்கான இப்தார் நிகழ்விலும் அண்மைக்காலமாக முஸ்லிம்களைச் சந்திக்கின்ற பல சந்தர்ப்பங்களிலும் இன்றைய இனவாத தாக்குதல் விடயங்களில் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் இனவாதம் கட்டுப்படுத்தப்பட வேண்டும், ஞானசாரவைக் கைதுசெய்யாமல் அரசே மறைத்து வைத்திருக்கின்றது; என்றெல்லாம் கூறிவருவது நாம் அறிந்ததே.
இன்று ஒரு விகாரையில் நடைபெற்ற நிகழ்வில் தேரர்களையும் பௌத்த மதத்திற்காக பேசுபவர்களையும் அரசு கைது செய்கிறது/ புதிய சட்டம் கொண்டுவந்து கைது செய்ய முனைகிறது; என்றெல்லாம் பேசியிருக்கின்றார். அதே நேரம் நாமல் ராஜபக்ச இன்று Sunday Leader பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் பெரும்பான்மையை அடக்கியாள்வதன் மூலம் சிறுபான்மையை சந்தோசப்படுத்த அரசு முனைகிறது; என்று தெரிவித்திருக்கின்றார். இவற்றின் மூலம் முஸ்லிம்களுக்கு முன் இவர்கள் எவ்வாறு நடித்தாலும் இவர்களின் பேரினவாதக் குணம் மாறப்போவதில்லை; என்பது தெளிவாகிறது .
மறுபுறம், இனவாதத்தை அடக்கி, இனவாதிகளை நாய்க்கூண்டில் அடைக்க உறுதியளித்து கதிரையில் அமர்ந்த நல்லாட்சி, அது அமர்ந்திருக்கும் கதிரையின் ஒரு கால் '21 முஸ்லிம் எம்பிக்கள்' என்று தெரிந்திருந்தும் முஸ்லிம்களின் வேதனை விசும்பல்களை கண்டும் காணாமல் இருக்கின்றது. நாலு மணித்தியாலத்திற்குள் 2000 இற்கு மேற்பட்ட இதுவரை மறைந்திருந்த பல தரப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய முடிந்த பொலிசாருக்கு, ஒரு ஞான சாரவையோ அல்லது பிணை நிபந்தனைகளை மீறிய ஒரு டாண் பிரசாத்தையோ கைது செய்ய முடியாமல் இருக்கின்றது.
அன்று நமக்கு அடிவிழுந்ததை, கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மஹிந்தவை திட்டித்தீர்த்தோம். இன்று மைத்திரி- ரணிலை வைது கொண்டிருக்கின்றோம். அவர்கள் தருகின்ற கஞ்சிக் கோப்பையை குடிப்பதா? இல்லையா? என்று பஞ்சாயத்து நடாத்திக் கொண்டிருக்கின்றோம்.
நமது இந்த அவலம் தொடர்கதையா? இதற்கு தீர்வே இல்லையா? அரசு - அது மஹிந்த அரசோ அல்லது ரணில்- மைத்திரி அரசோ அல்லது நாளை இன்னுமொரு அரசோ வந்தாலும் அது பேரினவாத அரசுதான். அதன் குணம் ஒன்றுதான். எனவே பேரினவாத அரசுக்கு ஏசுவதால் எதுவும் ஆகிவிடப் போவதில்லை. அப்படியானால் தீர்வுதான் என்ன?
தீர்வை அரசு ( அது எந்த அரசானாலும்) தராது. தீர்வை நாம்தான் அரசிடம் இருந்து பெறவேண்டும். அரசைத் தீர்வைத் தரவைக்க வேண்டும். அதை யார் செய்வது? எவ்வாறு செய்வது?
அதை நாம் தெரிவு செய்த பிரதிநிதிகள் மாத்திரமே செய்து சாதிக்கக் கூடிய சூழ்நிலைகள் இருக்கின்றன. பிரதிநிதிகளும் மக்களும் சேர்ந்து போராடித்தான் சாதிக்கலாம்; என்கின்ற சூழ்நிலையும் இருக்கின்றது. முழுமையான தீர்வைப்பெறவோ சாதிக்கவோ முடியாது, சமாளிப்பதைத் தவிர வேறு வழியில்லை; என்கின்ற சூழ்நிலைகளும் இருக்கின்றன.
இதில் எந்த சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம்; என்பதைத் தீர்மானிப்பது, எதிரியின் பலம்/ பலயீனம் , தீரவைத் தரவேண்டிய அரசின் பலம்/ பலயீனம், தீர்வை எதிர்பார்க்கின்ற நமது அரசியல் பலம்/ பலயீனம் ஆகியனவாகும்.
மஹிந்தவின் காலத்தில், ஆரம்பத்தில் பொது பல சேனாவுக்கு நாடு பூராகவும் கணிசமான ஆதரவு இருந்தது. பொதுபல சேனாவின் உண்மை முகம் தெரியாமல் மக்கள் அதன்பின்னால் அள்ளுண்டு போனார்கள் - அதாவது நமது எதிரி அன்று மிகவும் பலமாக இருந்தான். நமக்குத் தீர்வைத் தரவேண்டிய அரசிடம் 150 இற்கு மேற்பட்ட பாராளுமன்ற ஆசனங்கள் இருந்தன. எனவே அந்த அரசும் பலமாக இருந்தது. தீர்வை எதிர்பார்த்த நம்மிடமோ 17 ஆசனங்கள் மட்டும் இருந்தன. அந்த 17 பேரும் ஓட்டு மொத்தமாக அரசை விட்டு வெளியேறினாலும் அரசை வீழ்த்த முடியாத, அசைக்க முடியாத சூழ்நிலை அன்று இருந்தது. எனவே, அன்று சமாளிப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.
எனவே, அளுத்கம போன்ற இடங்களில் ஏற்பட்ட இழப்புகளுக்கு மத்தியிலும் மக்களின் போராட்டத்திற்கு மத்தியிலும் சமாளிப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.
இன்று
பொதுபல சேனாவுக்கு மக்கள் ஆதரவு இல்லை. அந்தவகையில் எதிரி பலயீனமாக இருக்கின்றான். தீர்வைத் தரவேண்டிய அரசிடம் பெரும்பான்மை இல்லை. எனவே அரசும் பலயீனமாக இருக்கின்றது. ஆனால் நம்மிடமோ 21 ஆசனங்கள்; என்பது மட்டுமல்ல. இந்த 21 ஆணனங்களில்தான் அரசு தங்கி இருக்கின்றது. இந்த 21 ஆசனங்கள் காலை வாரினால் அரசு நாளையே கவிழ்ந்து விடும். சுருங்கக் கூறின் நாம் மிகவும் பலமான நிலையில் இருக்கின்றோம்.
இவ்வளவு பலமான நிலையில் இருந்தும் நமக்கேன் இந்த அழுகை. பலமிருந்தும் பாவிக்கத் தெரியாத, நாம் தெரிவு செய்த பிரதிநிதித்துவங்களிலல்லவா தவறு இருக்கின்றது. அவர்களைத் தொடர்ந்து தெரிவு செய்து வரலாற்றுத் தவறை நாம் ஒரு புறம் செய்துகொண்டிருக்கின்றோம். சரி அதை வேறாகப் பேசுவோம். அவர்களைக் கொண்டு, அவர்களுக்கு நாம் வழங்கிய அரசியல் பலத்தை பாவித்து இதற்கு ஒரு தீர்வைக் கொண்டுவரச் செய்வதற்குகூடத் தெரியாத ஒரு கையாலாகத சமூகமாக இருந்து கொண்டு 'கஞ்சை' குடிப்பதா இல்லையா? என்று சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றோமே, இது அறிவுடமையா? நியாயமா?
புரிந்து கொள்ளுங்கள். இந்த இனவாதிகளை அரசு கட்டுப்படுத்த பிந்துகின்ற ஒவ்வொரு கணமும் பலயீனமான அந்த எதிரியின் பலம் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. இன்று மகிந்தவும் மகனும் மறைமுகமாக அவர்களுக்கு சாதகமாக பேசியிருப்பது நிலைமை மாறிக்கொண்டு செல்வதைக் காட்டுகின்றது. இறைவன் பாதுகாக்க வேண்டும். இன்னுமொரு அழுத்கமயை எம்மால் தாங்க முடியாது.
எனவே, நமது 'முட்டுக்கு' வேலை கொடுத்தாக வேண்டும். 'முட்டை' உடனடியாக கழட்டத் தேவையில்லை. ' கழட்டுவோம்' என்ற எச்சரிக்கையை காதும் காதும் வைத்தாற் போல் அரசுக்கு கொடுக்கச் சொல்லுங்கள். அதற்கும் அரசு மசியாவிட்டால் அமைச்சுப் பதவிகளை தூக்கி வீசிவிட்டு, அரசை விட்டு வெளியேறாமல் பின்வரிசையில் அமரச் சொல்லுங்கள். இன்ஷாஅல்லாஹ் நிச்சயம் தீர்வு கிடைக்கும். அதன்பின் மீண்டும் அமைச்சுப் பதவிகளை எடுத்து விடுபட்டதையும் சேர்த்து அனுபவிக்கச் சொல்லுங்கள். நமக்குத் தேவை தீர்வதான். அதற்கும் அரசு மசியவில்லையானால் எதிர்க்கட்சியில் அமர்வதைத் தவிர வேறு வழியில்லை.
அரசில் இருந்து சாதித்து விட்டீர்களா? என்ற கேள்விக்குப் பதில் இல்லாமல் எதிர்கட்சியில் அமர்ந்து என்ன செய்வது, என்ற வீணர்களின் வீண் வாதத்தை நிறுத்தங்கள். முஸ்லிம்கள் எதிர்க்கட்சி அரசியல் செய்யக் கூடாது; என்ற விதி எங்கும் எழுதப்படவில்லை; என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஆனாலும் ஆறுதலடையுங்கள், உங்களுக்கு எதிர்க்கட்சியில் அமரவேண்டிய அவசியம் ஏற்படாது. ஏனெனில் அரசு, தான் கவிழ்வதை ஒரு போதும் விரும்பாது. எனவே இன்ஷா அல்லாஹ் நமக்குத் தீர்வு கிடைக்கும்.
அதை விடுத்து, அமைச்சர்களின் வெற்று விளம்பரங்களை நிறுத்தச் சொல்லுங்கள். அமைச்சர்களாக இருந்தும் நாட்டின் அதிபரைச் சந்திக்க சிவில் அமைப்புகளும் பாராளுமன்றத்தில் இல்லாத தனி நபர்களும் நேரம் பெற்றுக்கொடுக்க வேண்டிய அவல நிலைக்கு முடிவு கட்டச் சொல்லுங்கள். சமூகத்திற்குள் இருந்து கொண்டு அமைச்சர்களுக்காக கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தை ஓய்வெடுக்கச் சொல்லுங்கள். அவர்களின் தைரியத்தில்தான் இந்த அமைச்சர்கள் உங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்கள்; என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
கண்ணில் நீர்வழிய, ஓரத்தில் நின்று தீர்வுக்காய் ஏங்கியது போதும். தீர்வு உங்கள் பிரதிநிதிகளின் கைகளில் இருக்கின்றது; இன்ஷா அல்லாஹ். அந்த தீர்வைப் பெறாமல் திரும்பி வரவேண்டாம்; என்று தீர்மானமாகச் சொல்லுங்கள்.
தாமதிக்கின்ற ஒவ்வொரு கணமும் ஆபத்து. மஹிந்தவும் மகனும் சேர்ந்தே மறைமுகமாக கழத்தில் இறங்கி வஇட்டார்கள் என்றால், களநிலவரம் ஏற்கனவே மாற்றமடைந்து விட்டது; என்பதுதான் அதன் பொருள்.
உடனே புறப்படுங்கள்
வை எல் எஸ் ஹமீட்
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post