அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கண்டனம்பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கம் பாகிஸ்தான் உதவியுடன் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்து வருகிறது.

தீவிரவாதி சையத் சலாவுதீன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகர் முசாபராபாத்தில் உள்ளான். இந்தியா மீது நடத்தப்பட்ட பல தாக்குதல்களில் மூளையாக செயல்பட்ட இவன் பதன்கோட் தாக்குதலிலும் பங்கேற்றவன். பாகிஸ்தான் உதவியுடன் அங்கு சுதந்திரமாக சுற்றி வருகின்றான்.

இதற்கிடையே, சலாவுதீனை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா நேற்று அறிவித்தது. அமெரிக்கர்கள் அவனுடன் எந்த ஒரு தொடர்பையும் வைத்துக் கொள்ள தடை விதிக்கப்படுகிறது. 

அமெரிக்க நீதித்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சலாவுதீனுக்கு சொந்தமான சொத்துக்கள் இருப்பின் அவை முடக்கப்படும் எனவும் அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்கும் முன்னதாக, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சலாவுதீனை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்த அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ’’காஷ்மீரில் விடுதலைக்காக போராடிவரும் மக்களுக்கு பாகிஸ்தான் தனது ஆதரவை தொடர்ந்து அளித்து வருகிறது. 

இந்நிலையில், இதற்காக காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பவரை (ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தலைவன் சலாவுதீன்) சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என குறிப்பிட்டுள்ளார்.