புடைவை கடை முதலாளிகளுடன் ஒரு நிமிடம்!ஜெம்ஸித் அஸீஸ்

இரண்டாவது பத்தின் ஆரம்ப நாளில் இருக்கிறோம்.

வேகமாகவே நகர்கிறது ரமழான்…

ரமழானின் ஈமானிய பொழுதுகள் கடந்து செல்கையில் கண்களில் ஈரம் கசிகிறது!

அழுதோம்… தொழுதோம்… அதனை கடைசி வரை தொடர்வோம்!

அதே வேகத்தில் கடைசிப் பத்தும் கதவைத் தட்டும்!

அதில் உச்ச பயனடைய வேண்டியது கட்டாயம்!

விண்ணுலகில் இருந்த அல்குர்ஆன் மண்ணுலகம் வந்தது அந்தப் பத்து நாட்களில் ஓர் இரவில்தான்.

அதுதான் லைலதுல் கத்ர்!

அதனை எப்படி தவற விடுவது?

தவற விட்டால் அடுத்த ரமழான் வரை கைசேதம்தான்!

அடுத்த ரமழானுக்கு முன் நம் ஆயுள் முடிந்து விட்டால்…

கைசேதம் கடைசி வரை கூடவந்து சாட்சிக்கு நிற்கும்!

எனவே, எல்லோரும் கடைசிப் பத்தில் கூடுதல் கவனம் செலுத்துவோம்.

குறிப்பாக அதன் இரவுகளில் தொழுது மகிழ்வோம்! அழுது மன்றாடுவோம்!

கடைசிப் பத்து கடை வீதிகளில் கரைந்து விடக் கூடாது!

கவனமாக இருப்போம்!

புடைவைக் கடை முதலாளிகளே!

கடைசிப் பத்து இரவுகளில் உங்கள் கடைகளை மூடுவது பற்றி சிந்தியுங்கள்!

நோன்பு 20 வரை உங்கள் உச்ச பட்ச வியாபாரத்தை திட்டமிடுங்கள்!

உங்கள் வாடிக்கையாளர்களுக்கு இப்போதே தகவல் கொடுங்கள்!

“நாம் இறுதிப் பத்தில் இரவு எட்டு மணிக்கே எங்கள் கடைகளை மூடிவிடுவோம். இப்போதே வாருங்கள்” என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்!

வாடிக்கையாளர்களும் சிந்திப்பார்கள்... செயல்படுபவர்களும் நிச்சயமாக இருப்பார்கள்…

கடைசிப் பத்து இரவுகளில் உங்கள் கடைகளை மொய்க்கும் வாடிக்கையாளர்களை இழப்பது பற்றி கவலை வேண்டாம்…

இறையருள் உங்களைச் சூழ்ந்து கொள்ளும்!

பரகத் உங்கள் வியாபாரத்தைச் சுற்றி நிற்கும்!

பிறகென்ன!