இரவுகளில் அவதானமாக இருப்போம்
இன்றைய (8-6-17) இரவு முதல் எதிர் வரும் 11ம் திகதி இரவு வரை மாற்று சமூகத்தின் தன்ஸல் இரவாகும். இந்நாட்களில் அவர்கள் குடும்பம், கூட்டாளிகள் சகிதம் வீதிகளுக்கு வருவது அனைவரும் அறிந்த விடயமாகும். இப் பயணங்கள் வாகனங்களிலும், நடையிலும் நடை பெறுகின்றன.

அப்போது அவர்களது கலாச்சாரத்துக்கு ஏற்ப! பாட்டு படித்துக் கொண்டும், கும்மாளமிட்டுக் கொண்டும் செல்வது போன்ற நிகழ்வுகளும் நடை பெறுவதுண்டு.

இவற்றை சகித்துக் கொள்வது எமது தார்மீகக் கடமையாகும். மாறாக! நோன்பு நாட்களில் முஸ்லிம் ஊருக்குள்ளே பாட்டு படித்துக் கொண்டு போகிறார்கள் என்று எவரேனும் பொங்கி எழுந்தால் அதனை மடமை என்றே கூற வேண்டும்.

எம்மவர்களால் அற்பமாகக் கருதப்படும் தவறுகளால் ஆபத்தான பல விளைவுகள் விளைந்த நிகழ்வுகள் வரலாற்றில் பல உள்ளன.

பல்முனை தாக்குதல்களால் மானசீகமாக தம் உரிமையை இழந்து நிற்கும் இச் சமூகத்திற்கு மேலும் இழப்புகள் ஏற்பட நாமே காரணமாகி விடக் கூடாது.

இந்நிலையானது! எம் விரல்களால் எம் கண்களை நாமே குத்திக் கொள்வதற்கு ஈடாகும். ஒரு விருட்சத்தில் இருந்து விழும் கனியானது தன் நிலையை தானே தீர்மானித்துக் கொள்ள அவசியப் படுகிறது. அக்கனியானது தனக்காக எவ்விடத்தை தேர்வு செய்கிறதோ அத்தெரிவிற்கேற்பவே அதனுள் இருக்கும் விதையின் வளர்ச்சியின் செழிப்பும் தீர்மானிக்கப் படுகிறது.

அவ்வாறே!..... விருட்சத்தின் பாதுகாப்பை இழந்த கனிபோல்! இந்த சமூகம் இந்நாட்டில் பாதுகாப்பிழந்து நிற்கிறது. அதிகாரத் துஷ்பிரயோகங்களால் சட்டமும் நீதியும் வலுவிழந்து, இனவாதம் வலுவடைந்து நிற்கிறது.
இந்நாட்டின் பிரஜைகள் எனும் ரீதியில் எமக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய கடமையுணர்வை மறந்து போயுள்ள அதிகாரிகளின் செயலானது! எம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

பன்முகத் தன்மையுடன் எமது உரிமைகளை காக்க வேண்டிய பொருப்பு எமக்கு உள்ளது போலவே! பிற உரிமைகளில் சங்கடங்களை உருவாக்காது சமயோசிதத்துடனும், சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொள்வதும் எமது பொருப்பாகும். இதனை *உணர்ந்து கொண்டால் உயர்வடைவோம். தவறினால் இழப்புகள் தவிர்க்க முடியாதவையாகலாம்*. அல்லாஹ் பாது காப்பானாக.

எமது சமூகத்தின் நலனையும், நாட்டின் பொது நலனையும் கருத்திற் கொண்டு நாம் மிக அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டிய தருணமிது. முஸ்லிம்  ஊர்களது பொருப்பாளர்கள் மற்றும், மஸ்ஜித் நிர்வாகிகள் இது குறித்த விளிப்பூட்டலை மக்களுக்கு விடுக்க வேண்டும். குறிப்பாக இத்தினங்களின் இரவுகளில் எமது பெண்கள் வீதிக்கு இறங்காத வண்ணம் திட்டமிடப் பட வேண்டும். அத்துடன் பாதையோரங்களில் நின்று கொண்டிருங்கும் வாளிபர்கள் தயவு கூர்ந்து சமுதாய நலன் கருதி இத்தினங்கில் தங்களை சீர் படுத்திக் கொள்ள வேண்டும்.

சொல் வீரத்தாலும், தூர நோக்கற்ற நடை முறைகளாலும் இச்சமூகம் இழப்பையன்றி! வேறெதனையும் சம்பாதித்து விடவில்லை. எனவே! மார்க்கத்துக்கு முரண் படாத  அனைத்து விடயங்களிலும் ஊரின் தலைமைக்கு கட்டுப் பட்டு சீரிய திட்டமிடலின் கீழ் எம் பலத்தை பாதுகாத்து பயணிப்போமாக.

இறைவா நாதியற்று நிற்கும் இச்சமூகத்தின் பாதுகாவலன் நீதான் றஹ்மானே. எம்மையும் எம் உடமைகளையும் பாதுகாத்ருள்வாயாக.

(அபூ ஸுமையா- மடவளை பஸார்)