பெற்றோலின்றி வெள்ளத்தில் தத்தளித்த எம்பிக்கள்

File Image


நாட்டின் பல இடங்களில் ஏற்பட்ட கடும் மழையுடன் கூடிய பெரு வெள்ளம் அந்ததந்த ஊர் மக்களை மாத்திரமன்றி அவர்களுக்கு உதவி செய்வதற்குச் சென்றவர்களையும் அசொளகரியத்துக்கும் ஆபத்துக்கும் தள்ளியது.
குறிப்பாக,களத்தில் நின்று மக்களுக்கு உதவிய பல அரசியல்வாதிகள் சரியானமுறையில் செயலாற்ற முடியாமல் அவதிப்பட்ட-இடையூறுகள் விளைவிக்கப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றன.
மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் களத்தில் நின்று சேவை செய்த ஜேவிபி எம்பி சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் காலி மாவட்ட எம்பி பந்துலால் பண்டாரிகொடா ஆகியோர் ஒரேமாதிரியான பிரச்சினைகளை எதிர்நோக்கினர்.
காலி மாபலகம எனும் ஊரில் இருந்து பந்துலால் பண்டாரிகொட எம்பிக்கு மக்கள் தொலைபேசி அழைப்பு எடுத்தனர்.அந்த ஊருக்கு நிவாரணப் பணியாளர்கள் யாரும் போகாததால் அவர்கள் சாப்பிடக்கூட வழி இல்லாமல் அவதிப்படுவதாகக் கூறினர்.
உடனே அங்கே உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு போவதற்குத் தாயாரானார் பந்துலால்.1500 சாப்பாட்டுப் பொதிகளை தயார்படுத்துமாறு ஹிக்கடுவையில் உள்ள அவரது நண்பர்களிடம் கூறினார்.
ஹிக்கடுவையில் இருந்து சாப்பாட்டுப் பொதிகளை எடுத்துக் கொண்டு நாகொடை வரை மட்டுமே வர முடியும் என்றும் அங்குவந்து பொருட்களை கையேற்குமாறும் அவரது நண்பர்கள் அவரிடம் கூறியதால் அவரும் ஒத்துக்கொண்டு நாகொடை செல்வதற்குத் தயாரானார்.
வீதி எங்கும் வெள்ளம்.படகில் மாத்திரமே செல்ல முடியும்.கடற்படையினருடன் பேசி படகு ஒன்றைப் பெற்றுக்கொண்டு கின் கங்கை ஊடாக 19கிலோ மீற்றர் பயணித்து நாகொடையை அடைந்தார்.
அங்கு நண்பர்கள் உணவுகளுடன் தயாராக நின்றனர்.அவற்றைப் பெற்று படகில் ஏற்றிக்கொண்டு மாபலகம போகத் தயாரானபோது படகில் பெற்றோல் தீர்ந்துபோய் இருந்தது அப்போதுதான் தெரிய வந்தது.
நாகொட பிரதேச சபையில் படகுகளுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படுவதை அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு 10லீற்றர் பெற்றோல் தருமாறு கேட்டார் .
ஆனால்,எம்பி கொண்டு சென்ற அந்தப் படகு அந்தப் பிரதேச சபையில் பதியப்படவில்லை என்றொரு காரணத்தைக் கூறி அவருக்கு பெற்றோல் கொடுப்பதற்கு அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
உடனே அங்கிருந்து 18கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள எரி பொருள் நிரப்பு நிலையத்துக்கு இருவரை மோட்டார் சைக்கிளில் அனுப்பி பெற்றோலை பெற்றுக்கொண்டார் எம்பி.
பெற்றோலை நிரப்பிக்கொண்டு மாபலகம எனும் இடத்தை அடையும்போது பிற்பகல் 3.30 ஆகி இருந்தது.பசியோடு இருந்த மக்கள் பொதிகளைப் பெற்று அந்த இடத்திலேயே சாப்பிடத் தொடங்கினர்.
இதுபோல் மற்றுமொரு சம்பவம் மாத்தறையில் நிவாரணப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுனில் ஹந்துன்நெத்திக்கு நிகழ்ந்தது.மக்களுக்கு உணவுப் பொருட்களைக் கொடுத்துவிட்டு திரும்பி வரத் தயாரானபோது படகில் பெற்றோல் தீர்ந்துபோய்விட்டது.
மாத்தறை பிரதேச செயலகத்தைத் தொடர்புகொண்டு பெற்றோல் கேட்டார் சுனில்.பெற்றோல் நிரப்பிவிட்டு பற்றுச் சீட்டைக் கொண்டு வாருங்கள் பணத்தைத் தருகின்றோம் என்று அங்கிருந்து பதில் வந்தது.
எங்கும் வெள்ளம்.பெற்றோல் வாங்கப் போவதாக இருந்தால் படகில்தான் போகவேண்டும்.இதைப் புரியாமல் சட்ட திட்டங்கள் பற்றிப் பேசிய அதிகாரிகளுக்கு செமத்தியாகக் கொடுத்தார் சுனில்.
இவ்வாறு பல இன்னல்களை அனுபவித்துத்தான் சில எம்பிக்கள் மக்களுக்கான சேவையில் ஈடுபட்டனர்.ஆனால்,அரச அதிகாரிகளோ ஏசி அறைகளுக்குள் இருந்துக்கொண்டு சட்டம் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
இவர்களது நல்ல நேரம் களுத்துறை பகுதியில் நிவாரணப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாலித தெவரப்பெருமவிடம் இவர்கள் சிக்கவில்லை.
சிக்கியிருந்தால் மேர்வின் சில்வாவை அவர்கள் தேவரப்பெருமவின் வடிவில் கண்டிருப்பார்கள்.