Jun 10, 2017

விளக்கு பாடலுக்கு வாக்குப்போடும் வரை முஸ்லிம்களின் உரிமையில் தீப்பற்றி எரியும்!


ஒரு காலம் இருந்தது, இப்படிப்பட்ட வன்செயல்கள் நடைபெற்றால் மூன்று நாட்களுக்கு பிறகுதான் அந்த செய்தி எங்களிடம் வந்துசேரும். அப்போது நாங்கள், இன்னதொரு இடத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாம் என்று ஒருவரிடம் இன்னொருவர் சொல்வதை கேட்டறிந்து கொள்ளும் காலமது.

அடுத்த நாள் காலையில் எங்கே என்ன நடந்தது என்பதை நாங்கள்  மறந்துவிடுவோம். தேர்தல் காலம் வரும்போது மட்டும் எங்களை சூடேற்றி வாக்குகளை அறுவடை செய்து பாராளுமன்றம் செல்ல சில "மனித தோல்" போர்த்திய சில நரிகள் வந்து மேடையமைத்து ஊலையிடும், நாங்களும் கூடவே மாலையிட்டு சமூகத்தின் சரித்திர புருசர்களாய் அவர்களை அனுப்பிவைப்போம். 

எங்கு எம்மவன் அடிபட்டாலும் நமக்கு தெரியாது எதாவது ஒருபத்திரிகையில் வருவதுதான் செய்தி.....அப்போது எமது தலைவர்களும் ஏதாவது ஒரு அறிக்கையை விடுவார்கள், அதுவும் கூடவே பிரசுரமாகும். வாசித்து விட்டு துண்டை உதரி தோளில் போட்டு நடந்த காலமும் இருந்தது. அதனால் நாங்கள் தொடர்ந்து எமது தலைவர்களால் ஏமாற்றப்பட்டு வந்தோம்.

ஆனால் இன்று அப்படியல்ல, காலம் தனது நவீன சிறகுகளை விரித்து உலகெங்கும் நடக்கும் சம்பவங்களை  ஒரு நொடியில் கொண்டு வந்து சேர்க்கும் தகவல் தொழிநுற்பத்தையும், இதுபோன்ற சமூக வலைதளங்களையும் எமக்கு பரிசாக தந்ததினால், இன்று உலகில் பறந்துபட்ட விடயங்கள் அனைத்தும் எம் உள்ளங்கைக்குள் வந்து குவிகிறது. உண்மைகளும் கூடவே வேகமாய் வருகிறது.

இப்போதுள்ள இளம் தலைமுறையினரை நவீனத்துவத்தின் சந்ததிகள் என்பதால் அரசியல் வாதிகளின் எந்த நடிப்பும் எடுபடுவதில்லை... பொய்யும் ஏமாற்றமும் நீடிக்கததால் அவர்கள் ஓடி ஒழிந்து கொள்கிறார்கள். 

தவளைகள் கோடைகாலத்திலும் இருக்கிறது. ஆனால் எம்மில் பலர் அவைகளை காண்பது குறைவு, மழை பூமிக்கு வந்தால் தவளைகளின் ராஜியம்தான் பள்ளத்தில் தேங்கி நிற்கும் வெள்ளத்தில் ரீங்காரமிடும் சத்தம் கேட்டு தவளை வந்திருப்பதை உணர்வோம். மாறியின் அடையாளமாய் அதைக் கொள்வோம். இத்தனை தவளைகளும் கோடையில் எங்கிருந்தது என்ற கேள்வி மட்டும் எப்போதும் எம்மத்தியில் எழுவதில்லை...

அதேபோல தான் எம் அரசியல்வாதிகளிலும் சிலர் இருக்கிறார்கள், தேர்தல் வரும் போதுதான் அவர்கள் வருவார்கள். அப்போது நாங்களும் ஏனைய காலங்களில் இவர்கள் எங்கு இருந்தார்கள் என்று மறந்து கூடவே ஒதுங்குவோம். தலைவன் சுமந்துவரும் பொய் மூட்டையை அவிழ்த்து விடுவான் அதில் எமக்கு தூக்கி சுமக்க இயலுமானதை வீட்டுக்கு கொண்டுவந்து எங்கள் பெண்களின் தலையில் வைத்துவிட்டு நிம்மதியாக உறங்கிவிடுவோம்..

ஆனால், இன்று இணையங்கள் வந்த பின்னர் யாரையும் யாரும் ஏமாற்ற முடியாது என்ற நிலை மாறி கூலிக்கு மாறடிக்கும் கூட்டமும் இதற்குள்ளே கால்பதித்து குப்பையாக்க பார்க்கிறது. அதையும் ஒருவாறு அறிந்து நாங்கள் சுதாகரித்துக் கொள்ள முடியும். ஏனென்றால் எதிர்ப்புவாதமும் சுதந்திரமும் கூடவே இருக்கிறது. 

ஆனால் இந்த இணைய உலகுகிற்கு வெளியில் இருக்கும் மந்தைக் கூட்டம்தான் இன்னும் விளக்கு பாடலைப் போட்டால் வாக்குப்போடும் கலாச்சாரத்தில் இருக்கிறது. இதை நாங்கள் மாற்ற வேண்டும், ஐம்பதை தாண்டியும் ஆசைதீராத அந்த காவல் நாயகர்களை அடித்து விரட்ட இளைஞர்கள் நாங்கள் முன்வர வேண்டும் நமக்காக நாம் என்ற புதிய தலைமையை உருவாக்க வேண்டும்.
சோரம் போகாத தன்மான தலைவனையும், சுயபலன் எதிர்பாராத தொண்டனையும் உருவாக்க வேண்டும்.

உயிரே போனாலும் சமூகத்திற்காக குரல் கொடுத்து எவரானாலும் எதிர்க்கும் உறுதியான அரசியல் பயணம் தொடர வேண்டும்.

இணைய உலகத்திற்கு வெளியில் இருப்பவனை உள்ளே இருப்பவன் நெறிப்படுத்தி அவனையும் உடன் அழைத்துச் செல்லும் பணியை இன்றிலிருந்து துவங்க வேண்டும்.

-அஹமட் புர்கான்-
கல்முனை
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post