கிழக்கு மாகாண அரசியல்வாதிகளின் சிபாரிசின் பேரிலே ஆற்று மண் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரங்கள்எம்.ஜே.எம்.சஜீத்

நமது நாட்டில் இறைவனால் வழங்கப்பட்ட இயற்கை வளங்களை நாம் பாதுகாக்காமல் விடுவதனால் பாரிய அனர்த்தங்கள் ஏற்படும் போது நமது மக்கள் பாதிக்கப்படும் நிலைமை உருவாகி வருகின்றன. நமது நாட்டிள் உள்ள இயற்கையான பாரம்பரிய ஆறுகள், கங்கைகளை நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும். அதற்கான திட்டங்களை நமது கிழக்கு மாகாண சபை உருவாக்கி நமது எதிர்கால சந்ததியினர் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.


கிழக்கு மாகாண சபையின் 79வது அமர்வு தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் இன்று(20) நடைபெற்றது. இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரினால் கொண்டுவரப்பட்ட மூதூர், கிண்ணியா பிரதேசங்களில் மகாவலி கங்கையில் மண் அகழ்வதால் சுற்று சூழல் பாதிக்கப்படுவது தொடர்பான அவசரப் பிரேரனையில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்…

கிழக்கு மாகாணத்தில் திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் அமைந்துள்ள இயற்கையான கங்கைகள், ஆறுகளில் இருந்து ஆற்று மண் அகழ்வு வேலைகளில் அரசியல்வாதிகளினதும், அதிகாரிகளினதும் தலையீடுகள் உள்ளதாக இன்று சபையில் உரையாற்றிய ஆளும் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். 

இந்த விடயத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசியல்வாதிகளின் சிபாரிசின் படியே ஆற்று மண் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு கிழக்கு மாகாண மக்களுக்கு நியாயமான விலையில் வழங்க வேண்டிய அற்று மண்ணை வெளி மாகாணங்களுக்கு கொண்டு செல்லும் முறை உருவாகியுள்ளது.; ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த விடயத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகளை நிறுத்த முடிந்தால் முயற்சி செய்துபாருங்கள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.

கிழக்கு மாகாண மக்களின் தேவைக்காக நியாயமான விலையில் ஆற்று மண்களை வழங்கி விட்டு மேலதிகமாக ஆற்று மண் இருந்தால் வெளி மாகாணங்களுக்கு அனுப்புவது தொடர்பாக ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டியுள்ளது. அண்மையில் நமது நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள மண் சரிவு போன்ற அனர்த்தங்களுக்கும் நமது மக்களே காரணமாக உள்ளதை இப்போது அறிய முடிகின்றது. 

நாம் கோழிகளை வளர்த்து கோழி முட்டைகளை பெறுகின்றோம். சிலர் முட்டையிடும் கோழியினை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது போல்தான் நமது எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாத்து வழங்க வேண்டிய பாரம்பரிய இயற்கை வளங்களை நமது மக்கள் இல்லாமல் செய்து வருகின்றனர் எனத் தெரிவித்தார்.