Jun 27, 2017

அமெரிக்காவை பழிவாங்குவதற்கு காத்திருக்கும் ஒசாமாவின் மகன்!


தந்தை ஒசாமா பின்லேடன் இறந்து நான்கு வருடங்களுக்குப் பிறகு அவரது மகன் ஹம்ஜா பின்லேடன் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.
2001 ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜலாலாபாத் என்ற பகுதியில் அமைந்துள்ள மலைத்தொடரில் ஒரு தந்தை தன் மூன்று மகன்களுடன் அமர்ந்து பேசினார்.
ஒவ்வொருவருக்கும் ஒரு புராதன மணிமாலையைக் கொடுத்தார். அந்தத் தந்தை ஒசாமா பின்லேடன். அந்த மகன்களில் ஒருவர்தான் ஹம்ஜா பின்லேடன். ஹம்ஜாவை அல் ​கொய்தாவின் தலைவராக்கும் எண்ணம் ஒசாமாவுக்கு இருந்ததாக இப்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.
2001 செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்தது. இதைத் தொடர்ந்து பின்லேடனின் பல குடும்ப உறுப்பினர்களும் அல் ​கொய்தா உயர்மட்டத் தலைவர்களும் ஈரானுக்கு சென்றனர். ஈரானுக்குள் அமெரிக்க இராணுவம் நுழையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானிய அதிகாரிகள் சில முக்கியமானவர்களை தங்கள் வசம் வைத்திருந்தனர். வருங்காலத்தில் தாங்கள் விரும்பியதை சாதிக்க அவர்களைப் பணயக் கைதிகளாக பயன்படுத்தலாம் என்ற எண்ணம்.
அவர்களில் முக்கியமானவர்கள் ஹம்ஜா மற்றும் அவரது தாயாரான காய்ரியா. ஈரானின் பாதுகாப்பில் இருந்து கொண்டே ஹம்ஜா திருமணம் செய்து கொண்டு சில குழந்தைகளுக்குத் தந்தை ஆனார்.
அதற்குப் பிறகு தன் தந்தையை ஹம்ஜா பார்க்கவில்லை. என்றாலும் ஒசாமா பின்லேடனைப் போலவே அவர் உருவாகிக் கொண்டிருந்தார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
2014ல் அல் ​கொய்தாவும், ஐ.எஸ். அமைப்பும் அதிகாரபூர்வமாகப் பிரிந்தன. அல்​ கொய்தா தனது ‘மிக உலகின் பயங்கரமான பயங்கரவாத அமைப்பு’ என்ற விம்பத்தைப் பறிகொடுத்தது.
ஐ.எஸ்.அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி புதிய ஒசாமா பின்லேடனாகக் கருதப்பட்டார். இன்று ஈராக் இராணுவம், குர்துகள், அமெரிக்க இராணுவம் போன்ற பலவற்றால் ஐ.எஸ்.அமைப்பு எதிர்க்கப்பட்டு வரும் நிலையில், அல் ​கொய்தா மீண்டும் தலையெடுத்துள்ளது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவை ‘ஒரு கிரிமினல் கூட்டத்தின் கறுப்பர் இனத்தலைவர்’ என்று விமர்சித்தார் ஹம்ஜா. 2015ல் சிறையில் உள்ள அல் ​கொய்தா உறுப்பினர்களை விடுவிக்க வேண்டும் என்று அறிக்கை விட்டார்.
ஏமன் நகரிலுள்ள ஈரானியத் தூதரகத்தில் அல் ​கொய்தா குண்டுகளை வெடிக்கச் செய்தது. இந்தக் கலவரத்தில் இரண்டு ஈரானிய தூதர்களை உயிரோடு பிடித்துச் சென்றனர்.
அல் ​கொய்தாவின் மூன்று தலைவர்களை விடுவித்தால்தான் இவர்களை அனுப்புவோம் என்று கூற, அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டது. சென்ற ஆண்டு ஹம்ஜாவிடமிருந்து ஒரு ஒலிநாடா வெளியானது. ‘‘ஜெருசலேம் என்ற மணமகளுக்கு நமது சீதனம் நமது இரத்தம்தான்’’ என்றது.யூதர்கள் மீது தாக்குதல் நடத்துவதை அது ஊக்குவித்தது.
21 நிமிடப் பேச்சு கொண்ட அந்த ஒலிநாடாவில் ‘‘நாங்கள் ஒவ்வொருவருமே ஒசாமாதான்’’ என்று கூறினார் ஹம்ஜா. குறிப்பாக அமெரிக்காவுக்கு நேரடியாகவே சவால் விட்டிருக்கிறார்.
‘‘என் தந்தையின் இறப்புக்குப் பழி வாங்குவோம். சொல்லப் போனால் என் தந்தையைக் கொலை செய்ததற்காக என்றில்லை, இஸ்லாமைப் பாதுகாப்பவர்களின் உறுதிமொழி இது’’ என்றார் ஹம்ஜா. ஹம்ஜா சரியான நேரத்திற்காகக் காத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network