ஒற்றுமையாக இருங்கள்: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு சீனா அறிவுரைதீவிரவாத தாக்குதலுக்கு ஆளாகும் நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று. தலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இதனிடையே தீவிரவாதிகளின் புகழிடமாக பாகிஸ்தான் திகழ்ந்து வருவதாக ஆப்கானிஸ்தான் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறது. இதனால் பாகிஸ்தான், ஆப்கான் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. 

இந்நிலையில், பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்புடன் செயல்பட்டு பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு காண  வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் சென்றுள்ள சீன வெளியுறவுத் துறை மந்திரி வாங் யி, அந்நாட்டு பிரதமர் ஆலோசகர் சர்தஜ் அஜிஸை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்தும், ஆப்கான், பாகிஸ்தான் உறவு குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

முன்னதாக நேற்று காபூல் நகர் சென்ற  வாங், ஆப்கான் வெளியுறவுத் துறை மந்திரி சலகுட் தின் ரப்பானி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹனீப் அத்மர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.