Jun 10, 2017

சொல் ஒன்று செயல் வேறாக இருந்தால் இன நல்லுறவு தழைக்காது - அமைச்சர் றிஷாட்சொல்லொன்று செயல் வேறாக  தமிழர்களும் முஸ்லிம்களும் நடந்துகொண்டால் அவர்களுக்கிடையிலான உறவுகள் ஒரு போதும் தழைத்தோங்கப்போவதில்லை என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மட்டக்களப்பு கொக்கட்டிக்சோலையில் 378வது சதொசக் கிளையைத் திறந்து வைத்த பின்னர். இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.

அவர் கூறியதாவது, தமிழர்களும் முஸ்லிம்களும் பிளவுகளையும் பிரிவுகளையும் உருவாக்கிக்கொண்டு தமக்குள் பிரச்சினைப்பட்டுக்கொண்டு இருக்கக்கூடாது. கடந்த கால வரலாறுகள் நமக்கு படிப்பினையாக இருக்க வேண்டும். கொக்கட்டிச்சோலை விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தலைமையகமாக விளங்கியதென்று இங்கு கூறினார்கள். யுத்தம் நமது மக்களின் வாழ்வைச் சீரழித்தது. பொருளாதாரத்தை நாசமாக்கியது.

இனங்களுக்கிடையிலான நல்லுறவைச் சீர்குலைத்தது. நமது தாய்மார்கள் தமது பிள்ளைகளையும் கணவனையும் பறிகொடுத்துவிட்டு அடுத்தவரிடம் கையேந்தும் நிலை இன்று உருவாகியுள்ளது. ஊனமுற்றோர் எண்ணிக்கை நமது சமுதாயத்தில் மலிந்து காணப்படுகின்றது. காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டு பிடித்துத் தாருங்கள் என்று உறவுகள் வீதிகளில் தவம் கிடக்கின்றனர். எனவே இழந்த நிம்மதியை மீண்டும் பெறுவதற்காக நாம் பணியாற்றவேண்டியிருக்கின்றது.

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் முட்டுக்கட்டைகள் தடங்கலுக்கு மத்தியிலுமே கொக்கட்டிச்சோலையில் சதொச கிளையை நிறுவியுள்ளோம். யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இந்தப் பிரதேச மக்களின் நன்மை கருதியே நாம் இந்தப்பணியை முன்னெடுத்தோம்.

சதொச நிறுவனம் தற்போது வீறு நடைபோட்டு வெற்றிப் பாதையில் இயங்கி வருகின்றது. சதொசவின் மூலம் எதிர் காலத்தில் அரச அதிகாரிகளுக்கு கடன் வழங்க திட்டமிட்டுள்ளோம். அதே போன்று பண்டிகைக் காலங்களில் வாடிக்கையாளர்களுக்கு விசேட பரிசுத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளோம்.

சீனியின் விலையை வர்த்தகர்கள் எழுந்தமானமாக அதிகரிக்க முடியாது. 12 அத்தியவசியப் பொருட்களுக்கு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் என்ற எனது அமைச்சு அதிகாரத்தைப் பயன்படுத்தி வர்த்தமானி பிரகடனம் மூலம் விலையை நிர்ணயித்துள்ளோம். கண்டபடி, மனம்போன போக்கில் வர்த்தகர்கள் எழுந்தமானமாக செயற்பட முடியாது. அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாட்டில் சீனியின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் இறக்குமதித் தீர்வை 10 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டமைக்காக வர்த்தகர்கள் உள்நாட்லும்; சீனியின் விலையை தாங்கள் விரும்பியவாறு அதிகரிக்கின்றனர்.

கொள்வனவு விலையில் எந்தப் பாதிப்பும் ஏற்படாத நிலையில்
வர்த்தகர்களின் இந்த நடவடிக்;கையை ஏற்றுக்கொள்ள முடியாது.
அடுத்த செவ்வாய்க் கிழமை இது தொடர்பாக வர்த்தகர்களை எனது அமைச்சுக்கு அழைத்து பேச்சு நடத்தவுள்ளேன். எவருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் அமீர் அலி, முன்னாள் பிரதியமைச்சர் கணேசமூர்த்தி மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் எனப் பலரும் உரையாற்றினர்.

ஊடகப்பிரிவு

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network