நாடுமுழுவதும் ஆகஸ்ட் 02 ஆம் திகதி ஸ்தம்பிதம் ? – உபாலி ரத்னாயக்கஎதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி தேசிய எதிர்ப்பு தினம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டு அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்த சைட்டம் எதிர்ப்பு மக்கள் செயலணி தீர்மானம் எடுத்துள்ளது.
அரச சொத்துக்களை தனியார் மயப்படுத்தல், சைட்டம் தனியார் மருத்துவ கல்வி நிறுவன அனுமதி, எட்கா  உடன்படிக்கை, காணாமல் போனோர் தொடர்பான சட்டம், தேர்தல் ஒத்திவைப்பு  போன்ற அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கைக்கு, கூட்டு எதிர்க் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகள், மக்கள் விடுதலை முன்னணி, தொழிற்சங்கங்கள், பெரும்பான்மை சமூக அமைப்புக்கள், மாணவர் ஒன்றியங்கள் என்பன ஒன்றிணையவுள்ளதாக தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டாளர் உபாலி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் தனியார் மற்றும் அரச நிறுவனங்களில் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்தல், அந்த நிறுவனங்களின் முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்துதல், மாவட்ட ரீதியில் பிரதான நகர்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தல், ஊர்வலங்களை நடாத்துதல், பொதுக் கூட்டங்களை ஏற்படுத்தல், நிறுவனங்களில் கறுப்புப் பட்டி அணிந்து பணியாற்றல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொள்ளுமாறு அரச மற்றும் தனியார் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.