ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த 4 பெண்கள் ஈராக்கில் கைது



ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் பல்வேறு நகரங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள், தற்போது பெருமளவு தங்கள் வசமிருந்த பகுதிகளை அரசுப்படையினரிடம் இழந்து வருகின்றனர். அந்த வகையில் ஐ.எஸ் அமைப்பின் வசமிருந்த பழமையான மொசூல் நகரை ஈராக் ராணுவம் சமீபத்தில் மீட்டது. 

ராணுவத்தின் இந்த தாக்குதலின் போது பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் தப்பியோடிய நிலையில், சிலர் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட ஜெர்மனியை சேர்ந்தவர்களின் விபரங்களை அந்நாட்டு அரசிடம் ஈராக் அரசு வழங்கியுள்ளது. அதில் 16 வயதான ஒரு சிறுமியின் பெயர் உட்பட நான்கு பெண்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. 

கைது செய்யப்பட்ட பெண்களை ஜெர்மனி தூதரக அதிகாரிகள் சந்தித்து பேசியுள்ளனர். அப்பெண்கள் தற்போது ஈராக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படலாம் என ஈராக் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவிக்க ஜெர்மனி வெளியுறவுதுறை மந்திரி மறுத்துவிட்டார். ஈராக் வெளியிட்ட விபரங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக ஜெர்மனியை சேர்ந்த வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.



சமீப காலத்தில் சுமார் 930 பேர் ஜெர்மெனியில் இருந்து வெளியேறி ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளனர். இதில் 20 சதவிகிதம் பெண்களும், ஐந்து சதவிகிதம் சிறுவர்-சிறுமியரும் அடங்குவர் என ஜெர்மனியின் உள்நாட்டு புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Powered by Blogger.