சீனாவில் எரிவாயு குழாய் வெடித்து 5 பேர் பலிசீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்யான் என்ற நகரில் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் இந்த எரிவாயு குழாயில் திடீரென கசிவு ஏற்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் எரிவாயு குழாய் வெடித்து சிதறியது. இதில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 89 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. மீட்புபடையினரும் விரைந்து சென்றனர்.

அவர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கியாசு மாகாணத்தில் சீன தேசிய பெட்ரோலிய துறைக்கு சொந்தமான இயற்கை எரிவாயு குழாய் வெடித்து சிதறியதில் 8 பேர் உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கதாகும்.