மலையக புகையிரத பாதையில் ஏற்பட்ட தடை எதிர்வரும் நாட்களில் வழமைக்கு திரும்பியுள்ளது(க.கிஷாந்தன்)

கொழும்பு பதுளை பிரதான புகையிரத பாதையில் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் 110 வது மைல் கட்டை பகுதியில் 13.07.2017 அன்று அதிகாலை புரதான 60 அடி பாலத்தில் புகையிரதம் தடம் புரண்டதில் மலையக புகையிரத சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டன.

இப்பாதையினை சீர் செய்வதற்கு தேவையான பொருட்கள் கொழும்பு, கண்டி, நாவலபிட்டிய பிரதான புகையிரத நிலையங்களிலிருந்தும் கொழும்பு வீதியூடாகவும் நானுஓயாவிலிருந்து பதுளை வீதியூடாகவும் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், 14.07.2017 அன்றைய தினம் அதிகமான புகையிரத தொழிநுட்பவியலாளர்களையும் ஊழியர்களையும் இரவு பகல் சேவையில் ஈடுபடுத்தி மிக விரைவில் புகையிரத பாதையினை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக புகையிரத திணைக்கள கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

13.07.2017 அன்றைய தினம் தடம்புரண்ட புகையிரத பெட்டிகளை தண்டவாளங்களில் அமர்த்துவதற்காக வருகை தந்த புகையிரத பாரந்தூக்கி தாங்கிய புகையிரம் கம்பளை மற்றும் ஹிங்குருஓயா பகுதியில் தடம் புரண்டதனாலும் மின்சாரம் இல்லாததன் காரணமாகவும் புகையிரத பாதை சீர்திருத்த நடவடிக்கையில் தாமதமேற்பட்டமை குறிப்பிடத்தக்கது.