அவசரமாக கூடுகிறது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்: வட கொரியாவுக்கு புதிய தடைகள்??பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கை குறிவைத்து அழிக்கும் ஏவுகணை மற்றும் ராக்கெட் எஞ்சின்களை சோதனை செய்யும் வடகொரியா, சமீபத்தில் புதிய ஏவுகணை ஒன்றை சோதனை செய்தது.

வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள பாங்யான் என்ற இடத்திலிருந்து சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடிய ஏவுகணையை வடகொரியா பரிசோதித்தது. இந்த சோதனையை அந்நாட்டு அதிபர் கிம் ஜான் உன் நேரில் பார்வையிட்டதோடு, அமெரிக்கர்களுக்கு சுதந்திர தின பரிசு என தெரிவித்திருந்தார்.

வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா சபை பொதுச்செயலாளர் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்திருந்தனர். குறிப்பாக வடகொரியாவின் தொடர் நடவடிக்கைகள் அமெரிக்காவை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை உடனே கூட்டி இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.

இதையடுத்து, வட கொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை தொடர்பாக விவாதிக்க ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூட உள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகளும் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.

மேற்கண்ட நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ஐ.நா தலைவர் அண்டோனியா கட்ரஸ் இந்த அவசர கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். ஏற்கனவே, வட கொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை ஐ.நா விதித்திருந்தாலும், தற்போது மேலும் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.