இலங்கை வரும் போதைப்பொருட்கள் ஐ.எஸ்.க்கு நிதி திரட்டவா?; பொதுபலசேனா கேள்வி

Jul 23, 20170 commentsஐ.எஸ். அமைப்புக்காக நிதிகளை திரட்டி உதவும் நோக்கில் இலங்கையில் போதைப் பொருள் கடத்தல்கள் நடக்கின்றதா என்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக பொதுபல சேனா தெரிவித்துள்ளது.

இராஜகிரியவிலுள்ள பொதுபலசேனா அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் இந்த ஊடகச் சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில்;

இந்த போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைது செய்வார்கள் என நாம் நம்பவில்லை. வேண்டுமென்றால் சம்பந்தமில்லாத சாரதிகள் , அவற்றை எடுத்துச் சென்றவர்களை கைது செய்வார்கள். ஆனால் அதனைக் கொண்டுவர காரணமானவர்களை கைது செய்யமாட்டார்கள். அவர் அமைச்சராகவும் இருக்கலாம்.

விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாகுவதற்கு அவர்கள் தமக்குத் தேவையான நிதியை தேடிக்கொள்வதற்காக  முன்னர் போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட வர்த்தகங்களில் ஈடுபட்டனர். பிரபாகரனின் ஊரான வல்வெட்டித்துறையில் போதைப்பொருள் மற்றும் திருட்டு வர்த்தகங்களே இடம்பெற்றன.
அதன் பின்னர் கப்பல் மூலம் போதைப்பொருள் வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று தற்போது வில்பத்து காடு அழிக்கப்படுவது தொடர்பாகவும் அங்கு கொலனிகள் அமைக்கப்படுவது தொடர்பாகவும் எமக்கு பெரிய சந்தேகம் உள்ளது. 

அதாவது கடந்த அரசாங்கத்துடனும்  இந்த அரசாங்கத்துடனும்  இப்போதும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடனும் இரகசியமாக பேச்சுகளை நடத்திவரும் அமைச்சர் ஒருவர் உள்ளிட்ட குழுவொன்றின் செயற்பாடுகளை பார்க்கும் போது தெளிவாக இந்த போதைப்பொருள் வர்த்தகமானது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்காக ஏதேனும் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.

 எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பு வளர்ச்சியடைந்ததைப் போன்று ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவான இந்தக் குழுவை இலங்கையில் வளர செய்வதற்காக அரசாங்கத்தில் சகல தரப்பினரும் செயற்படுகின்றனர் என்றே எண்ணுகின்றோம். அரசாங்கத்திற்கு பயமொன்று உள்ளது. அந்த  அமைச்சர் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குழுவுக்கு எதிராக செயற்பட்டால் அரசாங்கத்தின் இருப்புக்கு பிரச்சினையாகிவிடுமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது.

எமக்கு இந்த சந்தேகம் இப்போது மட்டுமல்ல சில மாதங்களுக்கு முன்பிருந்தே இது தொடர்பாக பிரச்சினையுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் 19 கொள்கலன்கள்  துறைமுகத்திலிருந்து சோதனைகளின்றி விடுவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆயுதங்கள் வந்ததா அல்லது போதைப் பொருள் வந்ததா என்ற சந்தேகங்கள் நிலவுகின்றன.
இப்போது குப்பைகளை வீசுவேரை கண்டுபிடிக்க சீ.சீ.ரி.வி. கமெராக்கள் பொருத்தப்படவுள்ளதாக அரசாங்கத்தில் புத்திசாலிகள் தெரிவிக்கின்றனர். முதலில் துறைமுகத்தில் சுங்கத்தில் அந்த சீ.சீ.ரி.வி. கமெராக்கள் பொருத்த வேண்டும். அதனை செய்தால் போதைப்பொருள் கடத்துவதை கண்டுபிடிக்கலாம். ஆனால் அது நடப்பதில்லை என அவர் தெரிவித்தார். 

Share this article :