மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் குப்பைகள் அதிகரிக்கப்பட்டு சூழல் மாசடைவு



(க.கிஷாந்தன்)

மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் மற்றும் நீர்தேக்கத்திற்கு நீர் உள்வாங்கும் பகுதிகளில் குப்பைகள் மற்றும் அசுத்த கழிவுகளை கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்தார்.

மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் குப்பைகள் அதிகரிக்கப்பட்டு சூழல் மாசடைவு ஏற்பட்டதனாலும், டெங்கு நோய் பரவும் அபாயம் இருப்பதனாலும், இந்த மவுஸ்ஸாக்கலை நீர்தேகத்தில் கரையோர பகுதிகள் மற்றும் நீரேந்தும் பகுதிகளில் நிரம்பி இருக்கும் குப்பைகளை சேகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்று 21.07.2017 அன்று முன்னெடுக்கப்பட்டது.

இவ் வேலைத்திட்டத்தினை மஸ்கெலியா பொலிஸார், அம்பகமுவ பிரதேச சபையின் சுகாதார பிரிவினர்கள், மின்சார சபை அதிகாரிகள், மஸ்கெலியா சென்.ஜோசப் தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவ, மாணவிகள் மஸ்கெலியா சிவில் அமைப்பினர் ஆகியோர் ஒன்றினைந்து மேற்கொண்டனர்.

இதன்போது நீர்தேக்கத்தின் கரையோர பகுதியில் துர்நாற்றத்தை வீசக்கூடிய நிலையில் காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணி விறுவிறுப்பாக முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை எதிர்வரும் காலத்தில் மவுஸ்ஸாக்கலை நீரேந்தும் பகுதிகளிலும் நீர் உள்வாங்கும் பகுதிகளிலும் காணப்படும் நீர் ஓடைகளில் பொதுமக்கள் கழிவுகளை கொட்டுவார்களாயின் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
Powered by Blogger.