அகதிகளுக்கு தடை விதியுங்கள்: அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவுஅமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தார்.

இது பல்வேறு போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்க கோர்ட்டுகளில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அதில் டிரம்ப் தடை உத்தரவுக்கு எதிரான தீர்ப்புகள் வழங்கப்பட்டன.

அவற்றை எதிர்த்து டிரம்ப் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தடை உத்தரவில் மாற்றங்களை கொண்டுவந்து நடைமுறைபடுத்த உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து, மேற்கண்ட 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் இருக்கும் பட்சத்தில் அவர்களது நெருங்கிய உறவுகளான தாய்-தந்தை, பிள்ளைகள், சகோதர-சகோதரிகள், வருங்கால கணவன் அல்லது மனைவி ஆகியோர் மட்டுமே அமெரிக்கா வர முடியும் என கூறி டிரம்ப் நிர்வாகம் புதிய தடை உத்தரவை பிறப்பித்தது.

மேலும் தாத்தா-பாட்டி உள்ளிட்ட மற்ற உறவினர்கள் யாரும் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது என அந்த தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

டிரம்ப் அரசின் புதிய தடை உத்தரவை எதிர்த்து ஹவாய் மாகாணத்தின் ஹோனோலுலு மாவட்ட கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், “தாத்தா-பாட்டி என்பவர்கள் குடும்பத்தின் மறுவடிவம் அவர்களை குடும்பத்தின் நெருங்கிய உறவில் சேர்க்காதது முட்டாள்தனம். அமெரிக்காவில் இருக்கும் மேற்கண்ட 6 நாடுகளை சேர்ந்தவர்களின் தாத்தா-பாட்டி மற்றும் மற்ற உறவினர்களும் அமெரிக்கா வரலாம்” எனவும் நீதிபதி டெரிக் வாட்சன் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ள தடை தொடர்வதற்கு அனுமதி அளித்துள்ள அந்நாட்டு சுப்ரீம் கோர்ட், 6 நாடுகளை சேர்ந்தவர்களின் உறவினர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ரத்து செய்துள்ளது.

மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை கோரி அந்நாட்டு நீதித் துறை உயர் நீதிமன்றத்தை நாடி இருந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. முன்னதாக அதிபர் டிரம்ப் கொண்டு வந்த தடை உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.