பலஸ்தீனில் இஸ்ரேலுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்புமஸ்ஜிதுல் அக்ஸா  வளாகத்திற்கு வெளியில் முஸ்லிம்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கும்  இஸ்ரேல் படையினருடன் இரண்டாவது நாளாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற மோதல்களில் பலஸ்தீனர்கள் பலரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மோதலின்போது இஸ்ரேலிய படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளது. இதில் அல் அக்ஸா இமாம் மற்றும் உச்ச முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் ஷெய்க் இக்ரிமா சப்ரி ஆகியோரும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த மோதல்களை அடுத்து அல் அக்ஸா பள்ளிவாசலை சூழ அவசர நிலை ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
புனித பள்ளிவாசலில் இஸ்ரேலிய படையினர் மேற்கொண்டிருக்கும் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை நிராகரித்தே பலஸ்தீனர்கள் அங்கு கோபத்தை வெளியிட்டு வருகின்றனர். இதற்கு எதிராக வரும் வெள்ளிக்கிழமை பொது ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு ஜெரூசலம் தலைமை முப்தி ஷெய்க் இக்ரிமா சப்ரி அழைப்பு விடுத்துள்ளதாகவும் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.