எல்லையில் பதற்றம் தொடரும் நிலையில் பாக். புதிய ஏவுகணை பரிசோதனைஇந்தியா - பாகிஸ்தான் இடையே தற்போது சுமூகமான நிலை இல்லை. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை தாண்டி தாக்குதலில் ஈடுபடுவதாக இரு நாடுகளும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகிறது. 

மேலும், காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ள பாகிஸ்தான், சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் பேசி வருகின்றது. இது மத்திய அரசை ஆத்திரத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில், தரையிலிருந்து குறைந்த தூரம் சென்று இலக்கை தாக்கும் ’நாஸ்ர்’ என்ற ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவம் பரிசோதனை செய்துள்ளது. நேற்று நடத்தப்பட்ட இந்த பரிசோதனை வெற்றிகரமாக நிறைவேறியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறைந்த தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் குறிப்பாக இந்தியாவை குறிவைத்தே அங்கு தயாரிக்கப்படுகிறது. இந்த சோதனைக்கு பின்னர் பேசிய அந்நாட்டு ராணுவ தலைமை தளபதி ஆலம் பஜ்வா, “எங்கள் திறமை ராணுவ பலம் மிக்க அண்டை நாடுகளுடன் அமைதியை கடைப்பிடிப்பது தான். போர் வேண்டாம் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ள விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபர், பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.