போதைப்பொருள் கடத்தலுக்கு வர்த்தக அமைச்சு பயன்படுத்தப் படுகின்றதா?
போதைப்பொருள் கடத்தலுக்கு வர்த்தக அமைச்சு பயன்படுத்தப் படுகின்றதா?
அமைச்சர் ரிசாத் பதியுதீனின் வர்த்தக அமைச்சின்கீழ் உள்ள “சதொச” நிறுவனத்துக்காக இறக்குமதி செய்யப்பட்ட சீனி கொள்கலனில் இருந்து 16௦ கிலோகிராம் கொக்கெயின் ரக போதைப்பொருள் நேற்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

பல நூறு கோடிகள் பெறுமதியுள்ள இந்த போதைப் பொருளானது அரசாங்கத்தின் சதொச நிறுவனத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனி கொள்கலனில், சீனியை போன்று மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டு இருந்ததையிட்டு, அந்த நிறுவன தலைவர் டி.எம்.கே.பீ. தென்னக்கோன் உற்பட அதிகாரிகள் பலரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளார்கள்.

இந்த போதைப்பொருள் கடத்தலானது வர்த்தக அமைச்சின் கீழுள்ள சதொச நிறுவனம் மூலமாக, அரசியல் அதிகாரத்தினை பயன்படுத்தி நீண்ட காலங்களாக சட்டவிரோத கடத்தல் செய்யப்பட்டு வந்திருக்கின்றது என்பது புலனாகின்றது.

ஏனெனில் பரீட்சயம் இல்லாமல் இவ்வளவு பாரிய தொகை பெறுமதியுள்ள போதைப் பொருளை, பல நூறு கோடிகள் பணம் முதலீடு செய்து முதலாவது தடவையிலேயே துணிச்சலுடன் இறக்குமதி செய்வதற்கு யாரும் முன்வரமாட்டார்கள்.

அத்தோடு அரசியல் உயர்மட்டத்தில் உள்ளவர்களின் ஆசீர்வாதமும், ஒத்துழைப்பும் இன்றியும், சர்வதேச ரீதியில் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புகள் இன்றியும், இவ்வளவு பாரிய போதைப் பொருளை இறக்குமதி செய்யவும் முடியாது.

இந்த போதைப் பொருளானது இலங்கைக்கு அண்மையில் உள்ள நாடுகளில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலேயே அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றது. அத்துடன் இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் எமது முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த வர்த்தகர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பதனை யாராலும் மறுக்கவும் முடியாது.

உலக வர்த்தகத்தில் பெற்றோல், ஆயுத தளபாடங்களை அடுத்து, மூன்றாவதாக சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகமே நடைபெற்று வருகின்றது. இது ஓர் வருடத்துக்கு ஐந்து இலட்சம் கோடி ரூபாய்களுக்கு வர்த்தகம் நடைபெறுவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

இந்த போதைப்பொருள் பாவனைகள் உலக நாடுகளில் சட்டரீதியாக தடைசெய்யப்பட்டு இருந்தாலும், அரசாங்கத்தில் அதிகாரத்தில் உள்ளவர்களின் செல்வாக்கு மூலம் வியாபாரம் நடைபெற்று வருவதனால், இந்த போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவது உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

நேற்று கொழும்பு துறைமுகத்திலிருந்து இரத்மலானை வெயார் ஹவுசிக்கு கொண்டுவரப்பட்ட கொள்கலனில் போதைப் பொருள் கண்டுபிடிக்கப் பட்டதை அடுத்து உடனடியாக கல்கிஸ்ஸை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தது.

ஆனால் இந்த விவகாரம் புலன் விசாரணை செய்யப்படுமா ? எவர்மீதும் குற்றம் சுமத்துவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி அரசியல் செல்வாக்கு காரணமாக குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வார்களா ? அல்லது அரசியல் அதிகாரத்தினை கொண்டு டம்பன்னுப்படுமா ? அதாவது வில்பத்து விவகார பிரச்சினையில் ஆதாரபூர்வமாக அம்பலமான “பென் ட்றைவ்” விவகாரத்தை போன்று மூடிமறைகப்படுமா ? என்பதுதான் அனைவரது கேள்விகளாகும்.    

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது