இலங்கை அகதிகள் முகாம் மீது குண்டுவீச்சு! இந்தியாவில் சம்பவம்கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த பூளுவப்பட்டியில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாம் மீது இந்து முன்னணியினர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளமை அவ்வட்டாரத்தில் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, பூளுவப்பட்டி அகதிகள் முகாமைச் சேர்ந்த இளைஞர்கள் ஜுலை 8ம் திகதி மாலை கைப்பந்து விளையாடிய போது தகராறு ஏற்பட்டுள்ளது.
அந்த வேளை அவ்வழியாகச் சென்ற காளப்பாளையத்தை சேர்ந்த சிவா (வயது 55) என்பவர் தகராறினை விலக்கி அவர்களைக் கண்டித்துள்ளார்.இதில் சிவாவிற்கும் அவர்களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. சிவாவின் மகன் சுரேந்திரராஜா இந்து முன்னணியைச் சேர்ந்தவர்.
அவர் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார் (27) மற்றும் சிலருடன் நேற்று இரவு அகதிகள் முகாமிற்கு சென்று, சிவாவை தாக்கியதைப் பற்றி விசாரித்துள்ளார்.
இதில் அவர்களுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரையொருவர் அரிவாள், கம்பு மற்றும் கற்களால் சரமாரியாக தாக்கிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் அகதிகள் முகாம் மீது பெற்றோல் குண்டு வீசியுள்ளனர்.இத்தகராறில் காயமடைந்த இந்து முன்னணியைச் சேர்ந்த ரமேஷ் குமாரையும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த சுமனையும் கோவை அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் ஆலாந்துறை காவல்துறையினர் இருதரப்பைச் சேர்ந்த பத்திற்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர்.
முகாமைச் சுற்றி காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என இதுவரை வெளியாகியுள்ள தமிழகச் செய்தி ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.