இளைஞர்களும் அவர்களுக்கிடையில் முக்கியமாகிப்போன மதுவும்முன்னொரு காலத்தில் மது அருந்துபவர்களை கண்டால் வெறுத்தொதுக்கிய எமது முஸ்லிம் சமூகம் பிற்பட்ட நாட்களில் நாகரீகம் வளர்க்கிறோம் எனும் பெயரில் கட்டம் கட்டமாக மதுவை மானசீகமான ஒரு செயலாக தம்மிடையே உட்புகுத்திக்கொண்டனர். 
ஏனைய மத கலாசார அனுஸ்டானங்களின் பின்னர் மது பரிமாறப்படுவது போல இவர்களும் திருமணம், மரண வீடு, கந்தூரி, அரசியல் கூட்டங்கள், ட்ரீட் என்று பலவாறாக மதுவை தமது சிநேகிதனாக ஆக்க தலைப்பட்டனர். 
மற்றும் சிலர் தலைநகரில் உயர் கல்வியை தொடரும் நல்லெண்ணத்துடன் சென்று பின் நல்ல நண்பர்களின் சகவாசம் காரணமாக மதுவை அங்கீகரிக்கின்றனர்(எல்லோருமல்ல). அறிந்து ஒரு கூட்டம் அறியாமல் இன்னொரு கூட்டம் விடுகின்ற சிறு சிறு தவறுகள் பரவிப் பெருக்கெடுத்து பல திசைகளிலும் நஞ்சாகி நலம் அழிக்கிறது. இவற்றையெல்லாம் தடுக்க சிலர் அயராது உழைப்பதை இறைவன் பொருந்திக் கொள்ளட்டும்.
மறு கரையில் பள்ளிவாயில், பாடசாலை, இளைஞர் அமைப்புகள் எல்லாம் சரமாரியாக தூங்குகின்றன விழித்துக் கொண்டே. பள்ளிவாசல்கள் கட்டிடத்துக்கு என்ன கலர் அடிப்பது என்றும், பாடசாலைகள் உள்ளக அதிகார கைப்பற்றலுக்காக பிச்சை எடுக்கும் நிலையும், அரசியல் வாதிகளை பற்றி நான் இங்கு சொல்ல அவசியமில்லை காரணம் பாதி இளைஞர்களுக்கு தங்கத்தை காட்டி தகர டப்பா (ஏமாற்றுதல்) கொடுப்பது இவர்கள் தான் என்பதாலே ஆகும். 
முஸ்லிம் இளைஞர்கள் மதுப்பாவனையில் இருந்து விடுபட வேண்டும். தமது எதிர்காலத்தை சரியாக திட்டமிட வேண்டும். கல்வியால் தண்ணிறைவு காண வேண்டும். இதற்காக வருகின்ற சமுதாய சந்ததிகளுக்கு நல்லதை போதிப்போம்.
சப்ராஸ்