மறைந்த மந்திரி மன்சூர் அவர்களை மானசீகமாக மதித்த மரைக்கார்


அண்மையில் எங்களையெல்லாம் விட்டுப்பிரிந்த முன்னாள் அமைச்சரும் கல்முனையின் அன்றைய அரசியல் கதாநாயகனுமாகிய ஏ.ஆர். மன்சூர் பற்றிய அன்னாரின் அழப்பரிய சேவைகள் தொடர்பாகவும் கடந்த சில தினங்களாக பத்திரிகைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளிவரும் விடயங்கள் எல்லாம் நாம் நன்கு அறிந்ததே.
இவ்வேலையில் இவருடன் இணைந்து இரண்டரக்கலந்து செயற்பட்ட ஆரம்ப அரசியல் ஆதாரவாளர்களுள் மிக முக்கியமானவர் தான் கல்முனைப் பட்டின சபை, வர்த்தக சங்கம், பள்ளிவாசல் போன்றவற்றின் தலைவராக இருந்து மறைந்த உள்ளுர் அரசியல் பிரமுகர்தான் கே.கே.எம். குழைந்தை மரைக்கார் என்பவர். இவர் இன்றைய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் அவர்களின் தகப்பனாரும் எனது மாமானாருமாவார் என்பதனால் எங்களைப் பற்றி எனக்கு தெரிந்தவைகளையும் இங்கு குறிப்பிடலாமா? என எண்ணுகிறேன்.
கல்முனையில் கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டங்களிலும் கலந்துரையாடல்களிலும் கலந்து கொண்டு காத்திரமான கருத்துக்களை வழங்கி மறைந்த அமைச்சர் மன்சூர் அவர்கள் வெற்றிவாகை சூடுவதற்கு வழிவகுத்தவர்களில் எனது மாமனாரும் ஒருவர். அப்போது அவருக்கு பக்க பலமாக இருந்து செயற்பட்டு வந்தவர்தான் இவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சியில் முன்னாள் அமைச்சர் மறைந்த திரு. காமினி திஸ்ஸநாயக்க அவர்கள் இப்பகுதிக்கு தேர்தல் பிரச்சார வேலைக்கு வந்த வேலையில் அன்னாருடன் இணைந்து இவர்களின் இளமைக்காலத்தில் எடுக்கப்பட்ட இப்புகைப்படம் இதற்கு சான்றாக இங்கு இணைக்கப்பட்டுள்ளது. அந்த பழைய கல்முனை அரசியல் வரலாற்றை அது இன்றும் பறை சாற்றுகின்றது. இவைகளையெல்லாம் இன்றையவர்கள் தெரிந்திருக்க நியாயமில்லைதான்.
இதேவேலையில்தான் ஒரு இக்கட்டாண சூழ்நிலைக்கு ;நானும் முகங்கொடுக்க நேர்ந்தது. அதாவது ஒரு வீட்டுக்குள் இரு கட்சிக்காரர்களாக நானும் எனது மாமனாரும் இருந்தாலும் அன்னாரின் அரசியல் நடவடிக்கையினால் அள்ளுண்டு போகாமல் கொண்ட கொள்கையில் எவ்வித மாற்றமும் மாறுதலுமின்றி வெறும் சலுகைகளுக்கு விலைபோகாமலும் ஏற்கனவே நான் கால் பதித்த அந்த “காங்கிரஸ்” கட்சியில் கடைசிவரை நின்று அன்று முதல் இன்று வரை பல தடைகளையும் தாண்டி தொடர்ந்து பயணித்து வந்தவர்கள்தான் (நான்)கள் என்பதை எம்மவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
சட்டத்தரணி கபூர்