எங்களை சிறை வைத்து விட்டனர் - குமுறும் மாணவர்கள் கருப்பு சட்டை போட்டால் குற்றமா?


சென்னை: பல்கலைக்கழக நூலகத்திற்கு படிக்க வந்த தங்களை போராட்டம் நடத்தப் போவதாக கருதி பிடித்து வைத்து விட்டனர். என்று பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கூறியுள்ளார். கருப்பு சட்டை போட்டு வந்ததால் சிறை வைத்து விட்டார்களா என்பது தெரியவில்லை என்றும் அந்த மாணவி கூறியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி விளக்க கருத்தரங்கக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் சிலர் அமர்ந்திருந்தனர். அவர்களில் சில மாணவிகள் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்ள எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்த வந்திருப்பதாக கூறி 12 மாணவர்களையும் பல்கலைக்கழக நூலகத்தில் காவல்துறையினர் சிறைப்பிடித்து வைத்தனர். 

கடந்த மாதம் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சென்னை பல்கலைக்கழகத்தில் இதே போன்று ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்த போது, மாணவர்கள் எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி வெங்கய்ய நாயுடுவிற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். இதுபோல எதுவும் நிகழ்ந்து விடக்கூடாது என்றே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களை போலீசார் சிறைபிடித்தனர். 

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் தொலைபேசி மூலம் நம்மை தொடர்பு கொண்டு பேசினார். ஞாயிறு மாலை மொத்தம் 11 மாணவிகளும், தொலைநிலைக் கல்வி வகுப்பில் கலந்து கொள்ள வந்த 4 பேரும் என மொத்தம் 15 பேரை போலீசார் தடுத்து வைத்துள்ளனர். நாங்கள் 11 பேருமே சாதாரண முறையில்தான் பல்கலைக்கழகத்திற்கு வந்திரு்தோம்.படிப்பு தொடர்பான டிஸ்கஷனுக்காகவும், லைப்ரரிக்கும்தான் வந்திருந்தோம். 

ஆனால் எங்களை தேவையில்லாமல் போராட்டம் நடத்தப் போவதாக கருதி பிடித்து வைத்து விட்டனர் நாங்கள் போட்டிருந்தது கருப்பு நிற சட்டை அணிந்து வந்ததால் பிடித்து வைத்தனரா என்று தெரியவில்லை. போராட்டம் குறித்து எங்களுக்குத் தெரியாது. நாங்கள் அதற்காகவும் அங்கு வரவில்லை. அதேபோல வெங்கையா நாயுடு வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததிலும் எங்களுக்கு சற்றும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.

 தலைமைச் செயலகத்திற்குள் கறுப்பு சட்டை அணிந்து சென்றாலே யாரையும் உள்ளே விடுவதில்லை. இப்போது பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும் கறுப்பு சட்டை அணிந்து செல்பவர்களை கைது செய்வது நியாயமா என்று கேள்வி எழுப்புக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.